தற்போதைய இந்திய சினிமாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் ஹாலிவுட் சினிமாவிலும் குறிப்பிடப்படும் நடிகராகவும் இடம் பிடித்த தமிழ் திரையுலகின் பொக்கிஷம் நடிகர் தனுஷ் அடுத்த நடிக்கும் ஒவ்வொரு படங்களும் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கின்றன. அந்த வகையில் முதலாவதாக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் பக்கா அதிரடி ஆக்சன் திரைப்படமாக தனுஷ் நடித்திருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. அடுத்ததாக தனது திரைப்பயணத்தின் 50 ஆவது திரைப்படத்தை தானே இயக்கி நடிக்கும் தனுஷ், பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் புதிய படத்திலும், ராஞ்சனா, அட்ராங்கி ரே படங்களின் இயக்குனர் ஆனந்த்.எல்.ராய் உடன் மீண்டும் தேரே இஸ்க் மெய்ன் என்ற புதிய படத்திலும் நடிக்கிறார்.
இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி கொடுத்த திருடா திருடி படத்தின் இயக்குனரும் நடிகருமான சுப்பிரமணியம் சிவா அவர்கள் திருடா திருடி திரைப்படத்தின் படப்பிடிப்பில் தனுஷுடன் பணியாற்றிய அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார் அப்படி பேசுகையில், “முதலில் துள்ளுவதோ இளமை படம் பார்த்தபோது எங்களுக்கு என்ன தோன்றியது என்றால், நாங்கள் அந்த சமயத்தில் அந்த வயதுள்ள ஒரு ஹீரோவை தேடிக் கொண்டிருந்த தருணம் அது. அப்போது தான் துள்ளுவதோ இளமை படம் ரிலீஸ். அப்போது பார்த்த உடனே சரி இவர் சரியாக இருப்பார் என யோசித்தோம். அப்போது விஜய் மற்றும் அஜித் இருவரும் கொஞ்சம் மேலே வந்து விட்டார்கள். அந்த வயதில் அப்போது யாருமில்லை. அதற்கு தனுஷ் மிகவும் சரியாக இருந்தார். அப்படி தான் திருடா திருடி படத்தின் கதையை அவரிடம் சொன்னோம். அப்போது காதல் கொண்டேன் திரைப்படத்தை தொடங்கி விட்டார்கள். எனவே காதல் கொண்டேன் & திருடா திருடி இரண்டு படங்களையும் அடுத்தடுத்த படங்களாக ஷூட் செய்தோம். திருடா திருடி படப்பிடிப்பு சமயத்தில் எனக்கு என்ன தோன்றியது என்றால் அவருக்கு நல்ல ஞாபக சக்தி இருந்தது. ஒரு முறை தான் அவரிடம் நான் கதை சொல்லி இருந்தேன். அதன் பிறகு அவரிடம் ஸ்கிரிப்ட் புத்தகத்தை கொடுத்திருந்தேன். அதன் பிறகு நாம் எந்த சீன் எடுத்தாலும் அதற்கு முந்தைய சீன் அடுத்த சீன் அவர் நம்மிடம் சொல்லுவார். நாம் படப்பிடிப்பு செய்யும் போது வரிசையாக சீன்களை எடுப்பதற்கான சூழ்நிலை மிகவும் குறைவாக இருக்கும். அப்போது நான் என்ன நினைப்பேன் என்றால் இதற்கு முந்தைய சீனில் நாம் என்ன மூடில் இருந்திருக்கும் அடுத்த சீனில் என்ன வருகிறது என அவருக்குள் ஒன்று வைத்திருக்கிறார். நாம் சொல்லுவோம் ஆனாலும் அதற்கு முன்பே அவர் ஒன்று செய்து வைத்திருப்பார். அதேபோல் இன்னொரு விஷயம் என்னவென்றால் அந்த 2003 காலகட்டத்தில் கேரவன் சிஸ்டம் எல்லாம் இல்லை. அப்போது ஏதாவது ஒரு காஸ்ட்யூம் வண்டி அல்லது அங்கு இருக்கும் ஏதாவது ஒரு வீட்டிலேயே காஸ்டியூமை மாற்றிக் கொள்வோம். அந்த அளவுக்கு அவர் ப்ரொடியூசர் ஃபிரண்ட்லி. அதற்கு காரணம் அவருடைய தந்தை அவர் ஒரு தயாரிப்பாளர் என்பதால் அந்த மாதிரியான சின்ன சின்ன விஷயங்களில் ஒத்துழைப்பார்.” என தெரிவித்துள்ளார். இயக்குனர் சுப்பிரமணியம் சிவாவின் அந்த முழு பேட்டி இதோ..