துள்ளுவதோ இளமை,காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை என பலவிதமான கதை களங்களில் தனக்கே உரித்தான காட்சி அமைப்புகளையும் கதாபாத்திரங்களையும் வைத்து கதை சொல்வதில் இயக்குனர் செல்வராகவனுக்கு நிகர் செல்வராகவன் மட்டுமே. தனக்கென்று ஒரு பாணியில் பல திரைப்படங்களை கொடுத்து தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் வைத்திருப்பவர் இயக்குனர் செல்வராகவன்.
கடைசியாக இந்த வருடம் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பில் உருவான நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படத்தை செல்வராகவன் இயக்கி இருந்தார். கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் செல்வராகவன் ரசிகர்களால் நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் கொண்டாடப்பட்டது என்று சொல்லலாம். அடுத்தடுத்து மன்னவன் வந்தானடி ,நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2,புதுப்பேட்டை 2, என கைவசம் பல திரைப்படங்களை வைத்திருக்கும் இயக்குனர் செல்வராகவன் தற்போது கதாநாயகன் அவதாரம் எடுத்திருக்கிறார்.
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் சாணி காயிதம் திரைப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்க, நடிகை கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். சமீபத்தில் சாணி காயிதம் திரைப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. கடந்த சில காலமாக சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக ரசிகர்களோடு இணைந்திருக்கும் இயக்குனர் செல்வராகவன் தற்போது ஒரு பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக நடிகர் தனுஷுடன் நானே வருவேன் திரைப்படத்தை இயக்கவுள்ள நிலையில் விரைவில் ஆயிரத்தில் ஒருவன் 2 மற்றும் புதுப்பேட்டை 2 ஆகிய இரண்டு திரைப்படங்களும் உருவாக்கும் என அறிவித்திருந்தார். முகத்திற்கு மிகவும் நெருக்கமாக வைத்து எடுக்கப்பட்ட ஒரு செல்பி போட்டோவை வெளியிட்டு அதோடு #finishedscript என குறிப்பிட்டுள்ளார். எந்த படத்திற்கான ஸ்கிரிப்ட்டை தற்போது முடித்திருக்கிறார் என்று ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.தற்போது இயக்குனர் செல்வராகவன் வெளியிட்டுள்ள இந்த செல்பி புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.