தமிழ் சினிமாவில் மண் சார்ந்தும் மக்கள் உணர்வுகள் சார்ந்தும் நல்ல நல்ல திரைப்படங்களை எடுத்து வரும் இயக்குனர் தங்கர் பச்சான் அவர்களின் அடுத்த படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் ‘கருமேகங்கள் கலைகின்றன’. இப்படத்தில் இயக்குனர்கள் பாரதிராஜா, எஸ் ஏ சந்திரசேகர், கௌதம் மேனன் மற்றும் அதிதி பாலன் மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைத்துள்ளார் ஜிவி பிரகாஷ் குமார். இந்த படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே தனி எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அட்டகாசமான வெற்றி படங்களை இயக்கிய தங்கர் பச்சான் அவரது அடுத்த படமாக இது அமையவுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு தனி ஆவல் எழுந்துள்ளது.

இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குனர் சந்திரசேகர் இப்படத்தை பற்றியும் இப்படத்தில் நடித்தது குறித்தும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் தனது மகனும் நடிகருமான விஜய் குறித்து பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் பேசியது,

“ஒரு விஷயத்தை நேசித்தோம் னா அது நம்மளை விடாது. அது மாதிரி சினிமாவை நேசிச்சதால அது எதோ ஒரு விதத்தில் நம்மை இழுத்துட்டு இருக்கு.. அதனால் இந்த சினிமா துறைக்கு நன்றி சொல்லிக்கிறேன். நான் நிறைய படங்கள் இயக்கியுள்ளேன். நிறைய சம்பாதிச்சிருக்கேன். தங்கர் பச்சான் போல பேரை சம்பாதிக்கல..‌ அவங்கள போல ஒரு இயக்குனராகனும்னு நினைத்திருக்கறேன். ஆனால் முயற்சி செய்ததில்லை.. தங்கர் பச்சான் எடுப்பது கலப்படமில்லாத படங்கள் அவையெல்லாம்.. அவர் இயக்கத்தில் நான் இந்த வயதில் நடித்திருப்பது பெரிய விஷயம். அதற்கு நன்றி சார்.." என்றார் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர். மேலும் தொடர்ந்து பேசிய அவர், "நானும் பாரதிராஜாவும் ஒரே மாவட்டத்திலிருந்து ஒரே காலக்கட்டத்திலிருந்து சினிமாவை நோக்கி வந்தவர்கள்.. அவர் முதல்ல இயக்குனரானார். அவரிடம் நான் உதவி இயக்குனரா சேரனும்னு ஆசைபட்டேன்.. நண்பராகவே இருப்போம்.. எனக்கு கோவம் வரும் அதனால் உன்னைய உதவி இயக்குனரா வெச்சிக்க முடியாது னு சொல்லிட்டாரு.. சரி நானும் இயக்குனராகி காட்டுறேன்னு இயக்குனரானேன். என் மகன் விஜய் நடிகனா ஆகனும் னு ஆசைபட்ட போது, ஒரு ஆல்பம் ரெடி பண்ணேன் அவருக்காக.. அந்த நேரத்தில் நான் 50 படங்களுக்கு மேல் இயக்கி முடித்திருந்தேன்.. நான் அவரை அறிமுகப்படுத்த வேண்டும் என்று ஆசைபடவில்லை. யாராவது நம்மள விட பெரிய இயக்குனர் அறிமுகபடுத்துனா நல்லாருக்குமே னு ஆல்பம் ரெடி பண்ணிட்டு பாரதி ராஜா அலுவலகம் சென்றேன்.

அவர் அப்போ பெரிய இயக்குனர். அவர் பார்த்துட்டு, 'ஏன்யா என்கிட்ட ஏன்யா கொண்டு வந்த.. நீயே பெரிய இயக்குனராச்சே.. நீ பண்ணுயா' என்றார். நான் பண்ண மாட்டேன்‌ நீயே பண்ணிக்கோ னு மறைமுகமா சொன்னார். நான் உதவி இயக்குனரா சேரனும் னு நினைச்சேன் நடக்கல.. என் மகன நடிக்க வைக்க முயற்சி செய்தேன் நடக்கல.. கடைசில தங்கர் பச்சான் எங்க இரண்டு பேரையும் நண்பர்களா நடிக்க வைச்சிருக்காரு.. பின்பு கௌதம் மேனன் அவரிடமும் விஜய்க்கு வாய்ப்பு கேட்டேன்.. நல்ல இயக்குனரெல்லாம் ஆரம்பத்தில் விஜய்க்கு வாய்ப்பு கொடுக்கல.. அது ஒருவகையில நல்லது. என்கையில் வந்ததால அவர் கமர்ஷியல் ஹீரோ ஆனார்.. என்றார் இயக்குனரும் நடிகர் விஜயின் தந்தையுமான எஸ் ஏ சந்திரசேகர்.