இயக்குனர் சசிகுமாரின் தயாரிப்பில் வெளிவந்த பசங்க திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் பாண்டிராஜ் . தொடர்ந்து வம்சம், மெரினா, பசங்க 2, கேடி பில்லா கில்லாடி ரங்கா, கடைக்குட்டி சிங்கம் என பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்துள்ளார்.
இந்நிலையில் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் நடிகர் சூர்யா நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் பாண்டிராஜ். இந்த திரைப்படம் குறித்து எந்த தகவலும் வெளிவராத நிலையில் இயக்குனர் பாண்டிராஜ் நேற்று இத்திரைப்படம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
நேற்று பிறந்த நாள் கொண்டாடிய நடிகர் கார்த்தியின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக ட்விட்டர் ஸ்பேஸில் ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா உடன் இணைந்து பேசிய இயக்குனர் பாண்டிராஜ், முன்னதாக கடைக்குட்டி சிங்கம் திரைப்படம் எவ்வாறு கார்த்தி ரசிகர்கள் அனைவரும் விரும்பும் படியாக அமைந்ததோ அதேபோல சூர்யா40 நடிகர் சூர்யா ரசிகர்கள் விரும்பும்படியாக ஒவ்வொரு காட்சிகளும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பிரமோஷன் போஸ்டர்கள் ,டீசர் என அனைத்திலும் மிகவும் மெனக்கெட்டு அழகாக உருவாக்கி வருவதாகவும் பேசியுள்ளார். இதனால் சூர்யா 40 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் என அடுத்தடுத்து அப்டேட்கள் விரைவில் வெளியாகும் எதிர்பார்க்கப்படுகிறது.