தமிழ் சினிமாவின் நட்சத்திர இயக்குனர்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் இயக்குனர் நெல்சன் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து தனது இரண்டாவது திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்த இயக்குனர் நெல்சன் உருவாக்கிய டாக்டர் திரைப்பட நிலையில் தனது மூன்றாவது பாடத்தில் தளபதி விஜய் உடன் படத்தில் கைகோர்த்தார் நெல்சன். கடந்த 2022 ஆம் ஆண்டு வெளிவந்த பீஸ்ட் திரைப்படமும் வசூல் ரீதியில் மிகப்பெரிய வெற்றி பெற்றது ஆனால் விமர்சன ரீதியில் சில எதிர்மறை விமர்சனங்களை பீஸ்ட் திரைப்படம் சந்தித்தது. இந்த எதிர்மறை விமர்சனங்களின் எதிரொலியாக சமூக வலைதளங்களில் அதிகமான ட்ரோல்களை சந்தித்த இயக்குனர் நெல்சன் மிகவும் எதிர்மறையான சூழ்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த ஜெயிலர் திரைப்படத்தை இயக்கினார். கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் வரலாற்று சாதனை படைத்து மிகப்பெரிய வெற்றி பெற்றது பெற்றுள்ளது.
இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலில் இயக்குனரும் நடிகையுமான திருமதி.சுகாசினி மணிரத்தினம் அவர்களின் கேம் சேஞ்சர்ஸ் வித் சுகாசினி மணிரத்தினம் எனும் சிறப்பு நேர்காணலில் கலந்து கொண்ட இயக்குனர் நெல்சன் திலீப்குமார் பல முக்கிய விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அந்த வகையில், "உங்களோடு ஆரம்ப கட்டத்தில் இருந்தே சிவகார்த்திகேயன் மற்றும் அருண் ராஜா காமராஜ் இருவருமே இருந்தார்களாமே.. என்ன பணியில் இருந்தார்கள்?" எனக் கேட்டபோது, “அவர்கள் வேட்டை மன்னன் படத்திற்கு முன்னாடி இருந்தே இருந்தார்கள். நான் ஸ்கிரிப்ட் பண்ணும் போதே உடன் இருப்பார்கள். நாங்கள் ஒரே ரூமில் ஒன்றாகவே இருப்போம் சிவகார்த்திகேயன் தொலைக்காட்சியில் வேலை பார்ப்பார் நானும் தொலைக்காட்சியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். இரவு நேரங்களில் சினிமா பற்றி பேசுவோம். அப்போது இருந்தே உடன் இருக்கிறார்கள் இரண்டு பேருமே வேட்டை மன்னன் திரைப்படத்தில் உதவி இயக்குனர்களாக பணியாற்றினார்கள்.” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவரிடம், “இருவரில் யார் அதிகமாக திட்டு வாங்குவார்கள்?” என கேட்ட போது, “அருண் ராஜா காமராஜ் தான். ஏனென்றால் சிவகார்த்திகேயன் மிகவும் கடினமாக உழைப்பவர் மிகச் சரியாக வேலை பார்ப்பார். சிவகார்த்திகேயனை பொறுத்த வரையில் அவர் கம்மியாக தூங்குவார் தொலைக்காட்சியில் பணியாற்றும் போது போட்டியாளராகவும் இருப்பார் அந்த நிகழ்ச்சிக்கு ஸ்கிரிப்ட் ரைட்டர் அவர்தான். அது இல்லாமல் ரேடியோவில் பணியாற்றுவது மேடைகளில் பணியாற்றுவது இந்த மாதிரி நிறைய வேலை பார்த்துக் கொண்டிருப்பார் நான் கூட கேட்பேன் எப்படி உனக்கு இதற்கெல்லாம் நேரம் இருக்கிறது என்று, அப்போது இருந்தே இந்த மாதிரி கடினமாக உழைக்க வேண்டும் என்பது அவரிடம் இருந்தது. ஊரிலிருந்து வந்திருக்கிறோம் எப்படியாவது அந்த வெற்றியை பிடித்து விட வேண்டும் என்று ஒரு வெறி எப்போதும் இருக்கும்” என தெரிவித்துள்ளார். இன்னும் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட இயக்குனர் நெல்சனின் அந்த சிறப்பு பேட்டி இதோ…