தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் தி வாரியர். தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்த தி வாரியர் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் தனது சகோதரர்களுடன் இணைந்து திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் மூலமாக பல படங்களை லிங்குசாமி தயாரித்துள்ளார். அந்த வகையில் முன்னதாக கடந்த 2014ஆம் ஆண்டு எண்ணி ஏழு நாள் திரைப்படத்தை தயாரிப்பதற்காக தனது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் மூலம் பிவிபி கேப்பிட்டல்ஸ் நிறுவனத்திடமிருந்து ஒரு கோடியே 3 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தார்.
இந்தக் கடன் தொகையை திருப்பி கொடுக்காததால் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் மீது பிவிபி கேப்பிட்டல்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இதனையடுத்து கடன் தொகையை திருப்பி அளிக்கும் வகையில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் அளித்த காசோலை போதிய பணம் இல்லாமல் திரும்பி வந்ததால் பிவிபி கேப்பிட்டல்ஸ் நிறுவனம் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் மீது செக் மோசடி வழக்கு தொடர்ந்தது.
இதனையடுத்து இந்த வழக்கிற்கு தற்போது தீர்ப்பளித்துள்ள நீதிமன்றம் இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்நிலையில் இயக்குனர் லிங்குசாமி இந்த தீர்ப்பை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். மேலும் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த அறிக்கையில்,
வணக்கம்.
இன்று பல ஊடகங்களில் பரபரப்பாக வரும் என்னை பற்றிய ஒரு செய்திக்கு தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டியது என் கடமை.
இந்த வழக்கு பிவிபி கேப்பிடல் லிமிடெட் மற்றும் எங்களது தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா பிரைவேட் லிமிடெட் இடையிலானது. அவர்கள் தொடுத்த வழக்கின் மேல் இன்று மாண்புமிகு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. நாங்கள் இன்று மாண்புமிகு நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு எதிராக உடனடியாக மேல் முறையீடு செய்து சட்டரீதியாக சந்திக்க உள்ளோம்.
நன்றி.
என தெரிவித்துள்ளார். லிங்குசாமியின் அந்த அறிக்கை இதோ…
— Thirrupathi Brothers (@ThirrupathiBros) August 22, 2022