ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த 2023ம் வருட பொங்கல் வெளியீடு படங்களாக தயாராகி இருக்கும் தளபதி விஜயின் வாரிசு மற்றும் அஜித்குமாரின் துணிவு ஆகிய திரைப்படங்கள் நாளை ஜனவரி 11ஆம் தேதி ரிலீஸாகின்றன. இன்று நள்ளிரவு முதலே முதல் நாள் முதல் காட்சி கொண்டாட்டங்கள் அனைத்தும் தொடங்குகின்றன.
இதுவரை இல்லாத அளவிற்கு முதல்முறையாக அஜித்குமாரின் துணிவு திரைப்படத்திற்கு 1:00AM சிறப்பு ரசிகர் மன்ற காட்சிகள் திரையிடப்பட இருக்கின்றன. நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக H.வினோத் - அஜித் குமார் - போனி கபூர் - நீரவ் ஷா கூட்டணியில் துணிவு திரைப்படம் தயாராகி இருக்கிறது.
இந்நிலையில் தற்போது செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் H.வினோத் அவர்களிடம், தொடர்ந்து மூன்று திரைப்படங்கள் ஒரே நாயகருடன் ஒரு இயக்குனர் பயணிப்பது ஆரோக்கியமா? உங்களது கருத்து என்ன..? என கேட்டபோது,
“இல்லை, அது ஆரோக்கியமாக இல்லையா என்பதை குறித்து யோசிக்க வேண்டியதில்லை. அந்த படம் வந்து… அந்தப் அணியில் பணியாற்றுபவர்களுக்கு வசதியாக இருக்கிறதா? அவர்கள் நல்ல விஷயங்களை செய்கிறார்களா என்றால்..? இப்போது நானும் அஜித் சாரும் நேர்கொண்ட பார்வை படம் பண்ணினோம். அது மிகவும் முக்கியமான படம் என நானும் நினைக்கிறேன், அவரும் நினைக்கிறார் படம் பார்த்து நிறைய பேரும் நினைக்கிறார்கள். வலிமை படத்திலும் அதே போல சமூக அக்கறையுடன் கூடிய நல்ல படமாக செய்தோம். அதேபோல துணிவு படமும் ஒரு சுவாரஸ்யமான திரைப்படமாக முதல் இரண்டு படங்களில் இருந்து கற்றுக்கொண்ட சில விஷயங்களை வைத்துக்கொண்டு இன்னும் சிறப்பான ஒரு சுவாரஸ்யமான படமாக பண்ணியிருக்கிறோம்.” என பதிலளித்துள்ளார். இயக்குனர் H.வினோத்தின் அந்த முழு பேட்டி இதோ…