இந்தியத் திரையுலகின் மிக முக்கிய இயக்குனராக ஆகச் சிறந்த படைப்புகளை வழங்கிய இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் தற்போது நடிகராகவும் பல திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த பாரதிராஜா அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார்.
இதனிடையே சில வாரங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாரதிராஜா தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வந்தார். நுரையீரலில் ஏற்பட்ட தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்ட இயக்குனர் பாரதிராஜா அவர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு பாரதிராஜாவின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும் விரைவில் பூரண குணமடைவார் என்றும் தெரிவித்த மருத்துவர்கள், தொடர்ந்து அடுத்த 40 நாட்களுக்கு அவர் கட்டாயமாக ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருந்தனர்.
இந்நிலையில் தற்போது இயக்குனர் பாரதிராஜா பூரண குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார். உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த இயக்குனர் பாரதிராஜா இன்று செப்டம்பர் 9ஆம் தேதி மாலை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. தொடர்ந்து இயக்குனர் பாரதிராஜா நல்ல உடல்நிலையுடன் இருக்க கலாட்டா குழுமம் மனமார வேண்டிக் கொள்கிறது.