இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் கதையின் நாயகனாக நடித்துவரும் வணங்கான் திரைப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை நடிகர் அருண் விஜயின் பிறந்த நாளான இன்று நவம்பர் 19ஆம் தேதி படக்குழு சர்ப்ரைஸாக வெளியிட்டது. தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவரும் முன்னணி கதாநாயகர்களில் ஒருவருமான நடிகர் அருண் விஜய் இன்று நவம்பர் 19ஆம் தேதி தனது 45 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். தொடர்ந்து தன் பாணியில் அதிரடி ஆக்சன் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவரும் நடிகர் அருண் விஜய் அவர்களின் பிறந்தநாளுக்கு கலாட்டா குழுமம் தனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. அந்த வகையில் அவரது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் வகையில் தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துவரும் வணங்கான் திரைப்படத்தின் படக்குழுவினர், “கடின உழைப்பிற்கான பலன் கிடைத்தே தீரும் என்பதற்கு சமீபத்திய உதாரணம். இன்னும் உழைத்து உயரமேற... வெற்றியாள வாழ்த்துகள். இன்றைய இனிய நாள் போல் வரும் எல்லா நாட்களும் இனிக்கட்டும்.... Happy Birthday அருண் விஜய்” என குறிப்பிட்டு வணங்கான் திரைப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அட்டகாசமான அந்த புதிய போஸ்டர் இதோ…

தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக தனக்கென தனி பாணியில் மிகவும் அழுத்தமான கதைக்களங்கள் கொண்ட திரைப்படங்களை அந்தக் கதைக்களங்கள் நடக்கும் உலகத்திற்கே மக்களை அழைத்துச் சென்று அதன் பாதிப்பை உணர வைக்கும் வகையில் தரமான படைப்புளாக கொடுத்து வரும் இயக்குனர் பாலா அவர்களின் இயக்கத்தில் அருண் விஜய் முதல் முறை இணைந்திருக்கும் படம் தான் வணங்கான். அருண் விஜயுடன் இணைந்து கதிர் நடிப்பில் வெளிவந்த ஜடா மற்றும் சமுத்திரக்கனி நடிப்பில் வெளிவந்த ஏமாளி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த பிரபல இளம் நடிகை ரோஷினி பிரகாஷ் வணங்கான் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இயக்குனர்கள் சமுத்திரகனி மற்றும் மிஷ்கின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் வணங்கான் திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் பாடல்களை எழுதுகிறார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு வணங்கான் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் வெளிவந்த வணங்கான் திரைப்படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. உடல் முழுக்க சேற்றுடன் ஒரு கையில் பெரியாரும் ஒரு கையில் பிள்ளையாரும் வைத்திருக்கும் அருண் விஜயின் வணங்கான் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தையும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தி இருக்கிறது.

அடுத்தடுத்து அதிரடி ஆக்சன் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் அருண் விஜய், அடுத்ததாக இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடித்திருக்கும் மிஷன் - சாப்டர் ஒன் அச்சம் என்பது இல்லையே திரைப்படம் நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அது போக பார்டர் மற்றும் அக்னி சிறகுகள் உள்ளிட்ட திரைப்படங்கள் அருண் விஜய் நடிப்பில் வெளிவருவதற்காக காத்திருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.