தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக தரமான படைப்புகளை கொடுத்து வந்த இயக்குனர் அமீர் அவர்களின் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படம் ஆதிபகவன். கடந்த 2013 ஆம் ஆண்டு வெளிவந்த ஆதிபகவன் திரைப்படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக இயக்குனர் அமீர் இயக்கத்தில் இதுவரை எந்த படமும் வெளிவரவில்லை. அடுத்ததாக தற்போது இறைவன் மிகப் பெரியவன் எனும் படத்தை இயக்குனர் அமீர் இயக்கி வருகிறார். அடுத்த 2024 ஆம் ஆண்டில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்தியேக பேட்டி கொடுத்த இயக்குனர் அமீர் அவர்கள் நம்மோடு பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில், “இயக்குனராக ஒரு பெரிய இடத்தில் உங்களை பார்த்திருப்பார்கள் பருத்திவீரன் , ராம் மாதிரி படங்கள் கொடுத்த ஒரு இயக்குனர் நீங்கள் தொடர்ந்து படங்கள் இயக்கி இருக்கலாமே இடையில் அந்த ஒரு பெரிய இடைவேளை எதனால் என்ன காரணங்களுக்காக அது தள்ளிப்போனது என கேட்டபோது,
“அது ஒரு அரசியல் நிலைப்பாடு நாம் 2009 ஆம் ஆண்டில் எடுத்த காரணம்தான். அதன் பிறகு இயக்குனர்கள் சங்க செயல்பாடுகளில் இறங்கியது. இயக்குனர்கள் சங்கம், FEFSI என ஒரு 5 - 6 ஆண்டுகள் அதிலேயே போய்விட்டது. அது என்னை மொத்தமாக உறிஞ்சி விட்டது. அது என்னை மிகவும் தொந்தரவு செய்தது. அதனுடைய எதிரொலி கூட ஆதி பகவனில் இருந்திருக்கலாம். காரணம் என்னவென்றால் நான் எந்த வேலையை எடுத்தாலும் நான் அதை நேரடியாக இறங்கி நின்று செய்ய வேண்டும் என்கிற எண்ணம் தான். கிட்டத்தட்ட 40 ஆண்டு காலமாக இருந்த இயக்குனர் சங்கம் வாடகை கட்டிடத்தில் தான் இயங்கி வந்தது. நாங்கள் இருந்த இரண்டு ஆண்டுகளில் தான் சொந்த கட்டிடத்தை வாங்கி வைத்துவிட்டு வந்தோம். இடைவேளை இருந்தது மறுக்க முடியாத உண்மை அந்த இடைவேளைக்கு நான் தான் காரணம். வேறு யாரும் காரணம் கிடையாது. நீங்கள் இப்போது என்னிடம் கேட்கும் இந்த கேள்வியை நிறைய பேர் ஒவ்வொரு பேட்டிகளிலும் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். உங்களுடைய இயக்கம் என்னானது என்று…” என பதில் அளித்து இருக்கிறார். இன்னும் பல முக்கிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்ட இயக்குனர் அமீர் அவர்களின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
ரசிகர்களின் மனம் கவர்ந்த இயக்குனர்களில் ஒருவராக மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் அமீர் பருத்திவீரன் படத்திற்குப் பிறகு 6 ஆண்டுகள் இடைவெளிக்கு பின் இயக்கிய ஆதி பகவன் திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெற தவறியது. அதன் பிறகு 10 ஆண்டுகளாக அமீர் இயக்கத்தில் எந்த படமும் வெளிவராத நிலையில் தற்போது இறைவன் மிகப்பெரியவன் எனும் படத்தை அமீர் இயக்கி வருகிறார். இதனிடையே நடிகராக இயக்குனர் வெற்றிமாறனுடன் வடசென்னை படத்திற்கு பிறகு மீண்டும் நடிகர் சூர்யாவின் வாடிவாசல் படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இயக்குனர் அமீர், தொடர்ந்து இயக்குனர் ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் மாயவலை படத்திலும் கதாநாயகனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.