தமிழ் திரையுலகின் சிறந்த நடிகர்களில் ஒருவராக திகழும் சீயான் விக்ரம் அவர்களின் மகனான துருவ் விக்ரம் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இளம் கதாநாயகராக வளர்ந்து வருகிறார். முன்னதாக தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்து வெளிவந்து சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக ஆதித்ய வர்மா திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.
தனது முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்த துருவ் விக்ரம், அடுத்து இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சீயான் விக்ரமுடன் இணைந்து மகான் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த ஆண்டில் (2022) பிப்ரவரியில் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான மகான் திரைப்படத்திலும் மிரட்டலாக நடித்தார்.
நடிகராக மட்டுமல்லாமல் பாடகராகவும் ஆதித்ய வர்மா மற்றும் மகான் ஆகிய திரைப்படங்களில் பாடல்களைப் பாடிய துருவ் விக்ரம் தொடர்ந்து சுயாதீன இசை கலைஞராக தனது பாடல்களை வெளியிட திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் அறிவித்தார். அந்தவகையில் துருவ் விக்ரமின் முதல் சுயாதீன மியூசிக் வீடியோவாக தயாராகியுள்ளது மனசே.
உஜ்வல் குப்தா இசையில், துருவ் விக்ரம் எழுதி பாடி, இயக்கியுள்ள மனசே மியூசிக் வீடியோவில் துருவ் விக்ரம் உடன் இணைந்து நட்டாலி டையாஸ் நடித்துள்ளார். க்ரிஷ் அண்ட்ரேட் ஒளிப்பதிவு செய்துள்ள மனசே பாடலுக்கு பாபு.A.ஸ்ரீவட்சா படத்தொகுப்பு செய்துள்ளார். இந்நிலையில் துருவ விக்ரமின் முதல் மியூசிக் வீடியோவான மனசே தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. அசத்தலான மனசே மியூசிக் வீடியோ இதோ…