நடிகர் சத்யராஜின் மகளும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் கடந்த மே மாதம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், லாக்டவுன் காலத்தில் மருந்து கடைகளுக்கு வரவேண்டிய சப்ளை வராமல் இருக்கலாம். வெளிநாடுகளிலிருந்து வர வேண்டிய மருந்துகள் லாக்டவுனால் மருந்துக் கடைக்கு வந்து சேர முடியாது. அதனால் சில மருந்து கடைகளில் பழைய மருந்துகள் இருப்பு இருக்கலாம்.
மக்கள் அனைவரும் கஷ்டப்பட்டு சம்பாதித்து சேர்த்து வைத்த காசில்தான் மருந்து வாங்க வருகிறார்கள். அவர்கள் வாங்கும் மருந்து அவர்களை குணப்படுத்தும் என்ற நம்பிக்கையில்தான் வாங்குகிறார்கள். தயவு செய்து உங்கள் கடைகளில் காலாவதியான மருந்துகளை டிஸ்போஸ் செய்ய ஒரு சிஸ்டம் அமைக்க வேண்டும் என்று மருந்து கடை வைத்திருப்பவர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதன் பிறகு திவ்யா சத்யராஜ், கொரோனா ஊரடங்கு காரணமாகப் பெரும் இழப்புகளைச் சந்தித்த விவசாயிகளுக்கு நேரடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று சமீபத்தில் விவசாய அமைச்சரிடம் கேட்டுக் கொண்டார். பிறகு மகிழ்மதி என்ற இயக்கத்தை ஆரம்பித்தார். இந்தியாவில் ஓர் ஆண்டின் கணக்கின்படி பத்து மில்லியன் திருமணங்கள் நடைப்பெறுகின்றன. அந்தத் திருமண விழாக்களில் பரிமாறப்படும் முப்பது விழுக்காடு உணவு வீணாகின்றன. உணவும் ஊட்டச்சத்தும் வசதியுள்ளவர்களுக்கு மட்டும்தான் என்பது நியாயம் இல்லை. வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பத்தினரும், குழந்தைகளும் கரோனா போன்ற தொற்றுக்களில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டுமாயின் அவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய உணவு தேவை.
மகிழ்மதி இயக்கம் அரசியல் கட்சியோ, சாதி, மதம் சார்ந்த அமைப்போ கிடையாது. வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் பகுதிகளில் ஊட்டச்சத்து நிறைந்த உணவை இலவசமாக வழங்க உருவாக்கப்பட்ட ஓர் இயக்கம். கொரோனா ஊரடங்கு நேரத்தில் வேலைகளுக்குச் செல்ல முடியாமல் வறுமையில் வாடும் குடும்பங்களுக்குத் தரமான உணவு வழங்குகிறோம். கொரோனா நேரத்தில் மட்டும் இல்லாமல் தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை இவ்வியக்கம் மேற்கொள்ளும் என்று கூறியிருந்தார்.
சமீபத்தில் ரதயாத்திரையை அனுமதிக்கக் கூடாது என்னும் கோரிக்கையை வைத்திருந்தார் திவ்யா சத்யராஜ். கொரோனா நேரத்தில் தமிழ்நாட்டில் ரதயாத்திரை நடந்தால் மக்களுக்கு கொரோனா பரவ வாய்ப்பு இருக்கிறது. ரதயாத்திரை அனுமதிப்பது நியாயம் கிடையாது. தமிழ் மக்களின் உடல் நலத்தின் மீதும், உயிர் மீதும் அக்கறை கொண்டுள்ள ஒரு ஊட்டச்சத்து நிபுணராகவும், தமிழ் மகளாகவும் ரத யாத்திரையை எதிர்க்கிறேன் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார். மதத்தை வளர்ப்பதில் இருக்கும் அக்கறை மக்கள் உயிர் மீதும், உடல் நலத்தின் மீதும் இல்லாதது வருத்தமாக இருக்கிறது எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் புதிய அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் சமூக இடைவெளி அவசியமான இந்த நேரத்தில், மிகவும் உள்ளது ரத யாத்திரை நடத்துவது பொது நலனுக்கு எதிரானதாகும். மேலும் இந்த விஷயம் தொடர்பாக நான் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் திவ்யா சத்யராஜ்.