தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளிவரவிருக்கும் திரைப்படம் ‘வாத்தி’. பைலிங்குவலாக தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகியிருக்கும் இப்படத்தில் ஜூனியர் ஆசிரியராக தனுஷ் நடிக்கும் தனுஷுடன் இணைந்து சம்யுக்தா மேனன், சமுத்திரக்கனி, சாய் குமார், ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தெலுங்கு மொழியில் ‘சார்’என்ற பெயரில் வாத்தி திரைப்படம் வெளிவரவுள்ளது. சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து தயாரிக்கும் வாத்தி திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஏற்கனவே படத்தின் முதல் பாடல் ‘வா வாத்தி’ தனுஷ் எழுத்தில் சுவேதா மோகன் குரலில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் யுகபாரதி வரிகளில் அந்தோனி தாசன் குரலில் பயணத்தை சார்ந்து வடிவமைக்கப்பட்டுள்ள இரண்டவாது பாடலான 'நாடோடி மன்னன்' பாடல் வெளியானது. ஜி வி பிரகாஷின் மெட்டுக்கு தனுஷ் துள்ளலாக ஆட்டம் போடும் காட்சிகளுடன் வெளியாகிருக்கும் பாடலில் பிரத்யேக காட்சியாக இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் மற்றும் அந்தோனி தாசன் பங்குபெற்று நடித்துள்ளனர். பாடல் வெளியானதையடுத்து தனுஷ் ரசிகர்கள் பாடலை அதிகளவு பகிர்ந்து வருகின்றனர்.
தனுஷ் ஜிவி பிரகாஷ் கூட்டணியில் உருவாகும் ஆறாவது படம் வாத்தி என்பதால் இப்படத்திற்கான பாடல்கள் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்னதாக 'பொல்லாதவன்', 'ஆடுகளம்', 'மயக்கம் என்ன', 'அசுரன்', 'மாறன்' ஆகிய படங்களில் ஒன்றாக பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது மற்றும் படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிப்ரவரி முதல் வாரத்தில் படக்குழு பிரம்மாண்டமாக நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கல்வியையும் கல்வியில் நடக்கும் ஊழலையும் எடுத்து சொல்லும் படமாக உருவாகியுள்ளது வாத்தி திரைப்படம்.மேலும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஜே.யுவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். தனுஷ் நடித்த வாத்தி திரைப்படம் முன்னதாக டிசம்பர் மாதம் வெளிவரவிருந்த நிலையில் பின்னர் திரைபடத்தின் வெளியீட்டு தேதி தள்ளி போனது அதன் பின் வரும் பிப்ரவரி மாதம் 17 ம் தேதி வெளியாகவுள்ளது என அதிகாரப் பூர்வமாக படக்குழு அறிவித்தது. வாத்தி படத்தின் தமிழக விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் கைப்பற்றியுள்ளது மேலும் வாத்தி திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை பிரபல ஒடிடி தளமான நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.