ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் அக்ஷய் குமார், தனுஷ், சாரா அலி கான் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் அத்ரங்கி ரே. டி-சீரிஸ் நிறுவனம் வழங்க கேப் ஆஃப் குட் பிலிம்ஸ் மற்றும் கலர் யெல்லோ நிறுவனம் இணைந்து இப்படத்தைத் தயாரித்து வருகிறது. இப்படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
இதன் படப்பிடிப்பு மதுரை, டெல்லி, ஆக்ரா உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வந்தது. சில தினங்களுக்கு முன்பு இந்தப் படத்தில் தனுஷ் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிவுற்றது. இதனைத் தொடர்ந்து இயக்குனர் மற்றும் படக்குழுவினருடன் தனுஷ் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின.
இதனிடையே இன்று டிசம்பர் 31-ம் தேதி அத்ரங்கி ரே இயக்குனர் ஆனந்த் எல்.ராய்க்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக இயக்குனர் ஆனந்த் எல்.ராய் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: எனக்கு இன்று கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. எனக்கு எந்த அறிகுறிகளும் இல்லை, நலமாகவே இருக்கிறேன் என்பதை அனைவருக்கும் தெரிவிக்க விரும்பினேன். அதிகாரிகளின் அறிவுறுத்தலின் படி தனிமையில் இருக்கிறேன்.
சமீபத்தில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்திக் கொண்டு, அரசாங்கத்தின் விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஆதரவுக்கு நன்றி என பதிவு செய்துள்ளார்.
அத்ரங்கி ரே இயக்குநருக்கு கொரோனா உறுதியான நிலையில், படக்குழுவினர் அனைவரும் கரோனா பரிசோதனை செய்துக் கொள்வார்கள் எனத் தெரிகிறது. சமீபத்தில் தனுஷ் படப்பிடிப்பை முடித்து திரும்பியவுடனே கொரோனா பரிசோதனை செய்துள்ளார். அவருக்கு நெகடிவ் என்பது உறுதியானவுடன் தான் குடும்பத்தைப் பார்க்கவே சென்றதாக அவருடைய தரப்பு தெரிவித்தனர்.
நடிகை சாரா அலி கானை வைத்தே அத்ரங்கி ரே கதை நகரும் என கூறப்படுகிறது. படத்தில் சாரா அலி கான் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என்றும், படத்தின் கதை இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் நடப்பது போல காட்டப்பட்டு இருக்குமாம். படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் தனுஷ் ஒரு பாடலை பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
I have tested covid positive today.Just wanted to inform everyone that I don’t feel any symptoms & I feel fine. I’m quarantining as instructed by authorities.Anyone wh has come in contact with me recently is advised to quarantine & follow d govt protocols.Thank you for support🙏
— Aanand L Rai (@aanandlrai) December 31, 2020