வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2019 ஆண்டு வெளியான அசுரன் வசூல் சாதனை செய்ததோடு, தனுஷின் சிறந்த நடிப்பிற்காக பாராட்டுகளையும் குவித்தது. தனுஷ், மஞ்சுவாரியர், கென் கருணாஸ், டீஜே அருணாச்சலம், பசுபதி உள்ளிடோர் நடிப்பில் போட்டிப்போட்டுக்கொண்டு நடித்தார்கள். எழுத்தாளர் பூமணியின் ’வெக்கை’ நாவல் கதையை திரையில் காட்சிகளாக ரசிக்க வைத்தார் வெற்றி மாறன். தனுஷ் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் தனுஷின் நடிப்பை பார்த்துவிட்டு ‘நடிப்பு அசுரன்’ என்றே புகழத் தொடங்கினார்கள்.
சிவசாமி என்ற பாத்திரத்தில் தனுஷ் வாழ்ந்தார் என்றே பலரும் பாராட்டினர். ஏற்கெனவே ஊடகங்களின் பல்வேறு விருதுகள், கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வான படம் போன்ற பல்வேறு சிறப்புகளை ’அசுரன்’ பெற்றிருக்கிறது. தெலுங்கிலும் நடிகர் வெங்கடேஷ் நடிப்பில் ’நரப்பா’ என்ற பெயரில் ரீமேக் ஆகி வருகிறது. இவ்வளவு பாராட்டுகளை குவித்ததால் தனுஷ் தனது ட்விட்டரில் பயோவை ASURAN/Actor என்றே பெருமையுடன் மாற்றினார்.
இந்நிலையில், ஜப்பான் நாட்டில் ஒசாகா நகரில் வரும் 27,28 தேதிகளில் நடக்கும் தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் அசுரன் திரையிட தேர்வாகியுள்ளது. அதோடு, சிறந்த தமிழ் படத்திற்கான போட்டியிலும் நாமினேட் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷ் நடிப்பில் கர்ணன் மற்றும் ஜகமே தந்திரம் திரைப்படம் வெளியாகவிருக்கிறது. கடைசியாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் D43 படத்தில் நடித்தார். தி கிரே மேன் எனும் ஹாலிவுட் படத்தில் நடிக்க தனுஷ் அமெரிக்கா கிளம்பயிருக்கிறார்.
அதனைத் தொடர்ந்து தன் அண்ணன் செல்வராகவனுடன் சேர்ந்து மீண்டும் படம் பண்ணுகிறார். நானே வருவேன் என்று தலைப்பிடப்பட்டுள்ள அந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இது தவிர சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் டி44 படத்தில் நடிக்கவிருக்கிறார் தனுஷ். அந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.