தமிழ் சினிமாவில் தலைச்சிறந்த சண்டை வடிவமைப்பாளர் ஜூடோ ரத்தினம் உடல் நலக்குறைவு காரணமாக தனது 92 வது வயதில் மூப்பு காரணமாக காலமானார். அவர்களின் மறைவை திரையுலகமே அனுசரித்து வருகிறது. 60 களில் திரையில் அறிமுகமாகி பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு சண்டை காட்சிகள் வடிவமைத்து தன்னிகரற்ற ஒரு இடத்தை பிடித்தவர் ஜூடோ ரத்தினம். தற்போது சினிமாவின் மூத்த சண்டை வடிவமைப்பாளர்களான விக்ரம் தர்மா, சூப்பர் சுப்பராயன், தளபதி தினேஷ், ஜாகுவார் தங்கம், ராம்போ ராஜ்குமார், பொன்னம்பலம் ஆகியோர் ஜூடோ ரத்தினம் அவர்களின் உதவி ஸ்டண்ட் இயக்குனர்களாக பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கிட்டத்தட்ட 1200 திரைப்படங்களுக்கு மேல் திரைப்படங்களில் பணியாற்றி மக்களுக்கு ரசனையுடன் சண்டை காட்சிகளை கொடுத்த கலைஞர் இவரின் இழப்பை பல உச்ச நட்சத்திரங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். முதல்வர் மு க ஸ்டாலின் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் இவருக்கு இரங்கல் தெரிவித்தனர்.
இந்நிலையில் தனுஷ் நடிப்பில் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'கேப்டன் மில்லர்’ படபிடிப்பு தளத்தில் படக்குழுவினர் அனைவரும் இறந்த பழம்பெரும் சண்டை வடிவமைப்பாளரான ஜூடோ ரத்தினம் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். நடிகர் தனுஷ், இயக்குனர் அருண் மாதேஸ்வரன், சண்டை வடிவமைப்பாளர் திலீப் சுப்ராயன் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கு பெற்றனர்.
மிகப்பெரிய பொருட்செலவில் 1930 சுதந்திர காலத்தில் நடக்கும் கதைக்களத்தில் தயாராகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்யா ஜோதி நிறுவனம் தயாரித்து வருகிறது. ஜிவி பிரகாஷ் இசையில் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் இப்படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் மூன்று தோற்றங்களில் நடிக்கும் தனுஷ் உடன் இணைந்து சந்தீப் கிஷன், பிரியங்கா மோகன், நிவேதிதா சதீஷ், ஜான் கோக்கன், மூர், குமரவேல், டேனியல் பாலாஜி, நாசர், விஜி சந்திரசேகர், சுவயம்சிதா தாஸ், பிந்து, அருணோதயன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.