மிகப்பெரிய சர்ச்சுகளை கிளப்பிய தி கேரளா ஸ்டோரி திரைப்படம் மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் இன்று (மே.5) ரிலீஸாகிறது. பாலிவுட்டில் இயக்குனர் சுதிப்தோ சென் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த கேரளா ஸ்டோரி திரைப்படம் பல உண்மையான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதா ஷர்மா, சோனியா பலானி, யோகிதா பிலானி ஆகியோருடன் இணைந்து நடிகர் சிலம்பரசன்.TR நடிப்பில் கடந்த ஆண்டு (2022) வெளிவந்த வெந்து தணிந்தது காடு படத்தின் கதாநாயகி சித்தி இத்னாணி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முன்னதாக சில தினங்களுக்கு முன் வெளிவந்த தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் ட்ரெய்லர் மிகப்பெரிய சர்ச்சைகளை கிளப்பியதோடு இப்படத்திற்கு தடை விதிக்க கோரி பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின.
அந்த ட்ரெய்லரில் உள்ள காட்சி அமைப்புகள் சொல்லும் கதை என்னவென்றால், கேரள மாநிலத்தில் இந்து குடும்பத்தில் பிறந்த ஷாலினி உன்னிகிருஷ்ணன் என்ற பெண் பிறகு பாத்திமா என இஸ்லாம் மதத்திற்கு மதம் மாற்றப்படுகிறார். இந்த கதாபாத்திரத்தில் நடிகை அதா ஷர்மா நடித்துள்ளார். இந்து மதத்தை சார்ந்த ஒரு செவிலியர் சூழ்ச்சியால் இஸ்லாம் மதத்திற்கு மதமாற்றம் செய்யப்படுகிறார். அதன்பிறகு ஆப்கானிஸ்தானில் சிறையில் அடைக்கப்படுகிறார். அங்கே எப்போது நீங்கள் ISISல் சேர்ந்தீர்கள் என விசாரணையில் அவரிடம் கேள்வி கேட்கப்படுகிறது. இது மட்டுமின்றி கேரளாவில் தொடர்ச்சியாக இது போன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது போன்ற வசனமும், “முன்னாள் முதல்வர் அடுத்த 20 ஆண்டுகளில் கேரளா முழுவதுமாக ஒரு இஸ்லாம் மாநிலமாக மாறிவிடும் என்று தெரிவித்துள்ளார்” என்ற வசனமும் கேரளாவில் இத்திரைப்படத்தை பலரும் எதிர்பதற்கு காரணமாக அமைந்தது. குறிப்பாக கேரள முதல்வர் பினராய் விஜயன் அவர்கள் சமீபத்தில் இந்த ட்ரெய்லரை பார்த்த பிறகு, “அரசுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரத்தை பரப்புவதை நோக்கமாகக் கொண்ட பல பொய்களை பரப்புவது போல் தெரிவதாக” படக்குழுவினரை மிகக் கடுமையாக சாடினார்.
உண்மையான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் என்ற பெயரில் உண்மைக்கு மாறாகவும் துளியும் ஆதாரமற்ற தரவுகளை மிகவும் வெறுப்புணர்வோடு தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தில் திணிக்கப்பட்டு இருப்பதாக சமூக ஊடகங்களில் பல தரப்பட்ட ரசிகர்களும் பகிர்ந்து வருகின்றனர். இத்திரைப்படத்திற்கு கேரளாவில் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து தமிழகத்திலும் மிகப்பெரிய எதிர்ப்புகள் கிளம்பின. அந்த வகையில் தி கேரளா ஸ்டோரி படத்தை தமிழகத்தில் தடை செய்ய கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் அந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் இன்று மே 5ம் தேதி உலகம் எங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. தமிழகத்திலும் மொழியாக்கம் செய்யப்பட்டு திரையிடப்படுகிறது. இந்த நிலையில், “தி கேரளா ஸ்டோரி திரைப்படம் ரிலீஸாக இருப்பதால் மிகவும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்கவும்” காவல்துறையினருக்கு தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். மேலும் “திரையரங்குகளில் பார்வையாளர்களை முழுமையாக பரிசோதனை செய்த பிறகு அனுமதிக்க வேண்டுமென்றும்” உத்தரவிட்டுள்ளார். மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் தற்போது தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியாகி இருக்கிறது. ட்ரெய்லருக்கே எக்கச்சக்கமான சர்ச்சுகள் கிளம்பிய நிலையில் திரைப்படம் வெளிவந்த பிறகு இன்னும் என்னென்ன சர்ச்சைகள் வெடிக்க இருக்கிறதோ தெரியவில்லை.