இந்திய சினிமாவின் மிகப்பெரிய ஆளுமை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். வயது என்பது எண்கள் மட்டுமே என்ற சொல்லை செயலாக்கிய ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் அடையாளமாக உலக நாடுகள் முழுவதும் ரசிகர்களை கொண்டவர். கருப்பு வெள்ளை காலம் தொடர்ந்து இன்று வரை பல படங்களில் நடித்து வரும் ரஜினிகாந்த். தற்போது நடித்து வரும் திரைப்படம் ‘ஜெயிலர்’ நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் திரைப்படத்தில் அவருடன் இணைந்து மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவராஜ் குமார், தெலுங்கு நடிகர் சுனில் மற்றும் இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப், நடிகை தமன்னா நடிக்கின்றனர். மேலும் இவர்களுடன் வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படம் விரைவில் முடிவடையும் நிலையில் உள்ளது. மேலும் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கவிருக்கும் லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருக்கிறார்.
அதனை தொடர்ந்து ரஜினி தனது 170 வது திரைப்படத்தை லைகா நிறுவனம் சுபாஸ்கரன் தயாரிப்பில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தினை உலக புகழ் பெற்ற ‘ஜெய் பீம்’ திரைப்படத்தின் இயக்குனர் த.செ ஞானவேல் இயக்கவுள்ளதாகவும் படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் இப்படம் அடுத்தாண்டு வெளியாகவுள்ளதாகவும் அதிகாரப் பூர்வமாக தகவல் வெளியானது.
இதனையடுத்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்து இந்த அறிவிப்பினை கொண்டாடி வந்தனர். ஆனால் படத்தில் பணியாற்றும் மற்ற தொழில் நுட்ப கலைஞர் குறித்த எந்தவொரு தகவலும் வெளியாகாமல் இருந்த நிலையில் படத்தின் பிரபல ஒளிப்பதிவாளர் எஸ்ஆர் கதிர் ஒளிப்பதிவு செய்யவுள்ளதாக தகவல் முன்னதாக வெளியானது. அதனை உறுதி செய்யும் வகையில் ஒளிப்பதிவாளர் எஸ் ஆர் கதிர் அந்த பதிவின் கீழ் பதிலளித்து உறுதி செய்துள்ளார். இதனையடுத்து எஸ் ஆர் கதிரின் பதிவை ரசிகர்கள் அதிகளவு பகிர்ந்து வருகின்றனர்.
எஸ் ஆர் கதிர் தமிழ் சினிமாவில் மிக பிரபலமான ஒளிப்பதிவாளர் ஆவர். இவரது முந்தைய திரைப்படங்கள் பெரும்பாலும் ஒளிப்பதிவு மக்களிடம் அதிகம் பேசப்பட்டது. அதன்படி அவரது ஒளிப்பதிவில் ‘கற்றது தமிழ்’, ‘சுப்பிரமணியபுரம்’, ‘ஜெய்பீம்’, ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ ஆகிய திரைப்படங்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவை தற்போது எஸ் ஆர் கதிர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள ‘கஸ்டடி’ திரைப்படத்தில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.