இந்திய திரையுலகின் சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் நீரவ் ஷா. தனது மூன்றாம் கண் கேமரா கொண்டு ரசிகர்களின் விழிகளுக்கு விருந்தளிக்கும் உயரிய கலைஞன். லிங்குசாமி இயக்கிய சண்டக்கோழி படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி தற்போது பல ப்ராஜெக்ட்டுகளில் பிஸியாக பணிபுரிந்து வருகிறார். சிவகார்த்திகேயன் நடித்து வரும் அயலான், விஷால் நடித்து வரும் துப்பறிவாளன் 2 போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்தியா முழுக்கவே ஒரு சில மாநிலங்கள் தவிர்த்து, இதர மாநிலங்களில் கொரோரோனா அச்சுறுத்தல் என்பது இன்னும் குறையவில்லை. இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகிறது. இதனால் கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி சென்னையில் டீசல் 77.29 ரூபாயும், பெட்ரோல் 83.18 ரூபாயும் விற்பனையானது. இது பொது மக்கள் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
தற்போது இது தொடர்பாக ஒளிப்பதிவாளரான நீரவ் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அப்பதிவில் இந்திய அரசாங்கம் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் விதம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. எரிவாயுவின் விலையை அதிகம் ஏற்றிவிடலாம் அப்போதுதான் யாரும் அவர்கள் வீட்டை விட்டு எப்படியும் வெளியே வர முடியாது என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் வலிமை படத்திற்கு நீரவ் ஷா தான் ஒளிப்பதிவு செய்கிறார். ஏற்கனவே வினோத் மற்றும் அஜித் காம்போவில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்திற்கும் இவர் தான் ஒளிப்பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
I love the way the Indian govt is controlling the infection spread. Raise fuel prices so much that no one gets out of their houses anyways.
— NIRAV SHAH (@nirav_dop) June 25, 2020