சென்னையில் போலீஸ்காரரின் கையை கடித்துக் குதறிய திருடனை போலீசார் கைது செய்தனர்.
சென்னை திநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் திருடன் ஒருவன் புகுந்துள்ளதாகவும், அங்குள்ள ஆள் இல்லாத வீடுகளில் திருடிக்கொண்டு இருப்பதாகவும், போலீசாருக்கு தொலைப்பேசி மூலம் புகார் வந்தது.
குறிப்பிட்ட அடுக்குமாடிக் குடியிருப்புக்கு விரைந்த வந்த போலீசார், திருடனைப் பிடிக்க முற்பட்டனர். ஆனால், போலீசாரை கண்ட திருடன் வீடுகளில் உள்ள கண்ணாடி ஜன்னலை உடைத்துக்கொண்டு தப்பிக்க முயற்சி செய்தான். இதனையடுத்து, சத்தியமூர்த்தி என்ற போலீஸ்காரர், திருடனை விரட்டிச் சென்று அவனைப் பிடித்துள்ளார். ஆனால், சத்தியமூர்த்தியின் கையை கடித்துக் குதறிவிட்டு, தப்பிக்க முயன்றுள்ளான். அப்போதுதான், அந்த திருடன் வடமாநிலத்தைச் சேர்ந்தவன் என்பது அனைவருக்கும் தெரியவந்தது.
இதனையடுத்து, அங்குக் கூடியிருந்த பொதுமக்கள் பலர், திருடனை மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். அதன்பின், போலீசாரிடம் அந்த திருடனை ஒப்படைத்தனர். பின்னர், திருடனிடம் நடத்திய விசாரணையில், அவன் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும், அவன் பெயர் பல்வதூர் என்பதும் தெரியவந்தது. மேலும், ஆளில்லாத பல வீடுகளில் அவன் திருடியதும் தெரியவந்தது.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.