ஆந்திரா முன்னாள் முதலமைச்சரும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அந்த மாநில முதலமைச்சராக ஜெகன் மோகன் ரெட்டி உள்ளார். இந்நிலையில், ஆந்திராவில் ஆளும் கட்சியாக உள்ள ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி, திட்டமிட்டு தெலுங்க தேசம் கட்சியினர் மீது தாக்குதல் நடத்தி, அவர்கள் மீது பொய் வழக்குப் பதிவு செய்வதாகவும், எதிர் கட்சிகள் குற்றம்சாட்டின.
இந்நிலையில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அரசியல் வன்முறையில் ஈடுபடுவதாகக் கூறி, தெலுங்க தேசம் கட்சியினர் இன்று பேரணி நடத்துவதாக அறிவித்திருந்தனர்.
மேலும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம் நடத்தவும் முடிவு செய்திருந்தார். இதனிடையே, இன்று பேரணிக்குக் கிளம்ப முயன்ற சந்திரபாபு நாயுடுவை, ஆந்திர மாநில போலீசார் வீட்டுக்காவலில் சிறை வைத்தனர். அத்துடன், சந்திரபாபு நாயுடுவின் மகன் நரலோகேஷையும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
அதேபோல், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு எதிராகப் பேரணி நடத்த முயன்ற தெலுங்கு தேச கட்சித் தலைவர்களும், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். மேலும், சந்திரபாபு நாயுடு வீட்டுக்குச் செல்ல முயன்ற தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர்களையும் போலீசார் கைது செய்தனர்.
குறிப்பாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆந்திராவில் உள்ள நரசராவ்பேட்டா, சட்டேனாபள்ளி, குரஜாலா உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் வன்முறை வெடிக்கும் என்பதால், அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.