சுசீந்திரன் இயக்கி வரும் ஈஸ்வரன் படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இந்த படத்திற்காக சிம்பு தன் உடல் எடையை வெகுவாக குறைத்து செம ஃபிட்டாக இருக்கிறார். ஈஸ்வரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்து வருகிறார். படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
கிராமத்து பின்னணி கொண்ட ஈஸ்வரன் படத்தின் ஷூட்டிங் திண்டுக்கல் பகுதியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஒரே ஷெட்யூலில் படப்பிடிப்பை முடிக்கவிருக்கிறார் சுசீந்திரன். ஈஸ்வரன் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக ரிலீஸாகவிருக்கிறது. ஒரு மாதத்தில் படப்பிடிப்பை முடித்து ஒரு படம் ரிலீஸாகிறதா என்று தான் அனைவரும் வியப்பில் இருக்கிறார்கள்.
ஈஸ்வரன் படத்தின் கதை என்னவாக இருக்கும் என்ற ஆவல் பலருக்கும் ஏற்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் முன்பு வரை சிம்புவின் முகத்தை யாராலும் பார்க்க முடியவில்லை. ஷூட்டிங்ஸ்பாட்டுக்கு யாரும் செல்போன் கொண்டு வரக் கூடாது என்று கூறிவிட்டார் சுசீந்திரன்.
சமீபத்தில் கேரவனில் இருந்து சிம்பு வெளியே வர அவரை பார்க்க கூடியிருந்த ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தபோது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது. ஃபிட்டாக இருக்கும் சிம்புவை எத்தனை முறை பார்த்தாலும் போதவில்லை, மீண்டும் மீண்டும் பார்க்க ஆசையாக இருக்கிறது என்றனர் ரசிகர்கள்.
இந்நிலையில் ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளன. அதில், உண்மையாகவே உயிருடன் உள்ள பாம்பை மரத்தில் இருந்து பிடித்து சாக்குப்பையில் சிலம்பரசன் போடுவது போல காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த காட்சிகள் படப்பிடிப்பு தளத்தில் இருந்து லீக்காகி இணையத்தில் வைரலானது. இந்தியாவில் பாம்புகள் அனைத்தும் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட உயிரினங்களாகும். சிம்பு பிடித்த பாம்பு வன உயிரின பாதுக்காப்பு சட்டத்தின் பட்டியல் 2ல் பிரிவு 2ல் இடம்பெற்றுள்ளது. இச்சட்ட்த்தின் கீழ் பாதுகாப்பட்ட உயிரினத்தை வைத்து படம் பிடிப்பது குற்றமாகும்.
பொதுவாக பாம்புகளை சினிமாவில் பயன்படுத்தும்போது அதன் பல் பிடுங்கப்பட்டிருக்கும் அல்லது வாய் ஒட்டப்பட்டிருக்கும். இப்படி வனவிலங்குகளை துன்புறுத்துவது குற்றம் என்பதால் சிம்பு வன உயிரின பாதுகாப்பு சட்டத்தை மீறியிருப்பதால் அவர் மீது உரிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய விலங்கு நல ஆர்வலர்கள் வேளச்சேரியிலுள்ள வனத்துறை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.