கேரளாவை சேர்ந்த இந்து மத பெண்களை ஏமாற்றி இஸ்லாமிய மதத்திற்கு மாற்றி அவர்களை தீவிரவாதிகளாக மாற்றுவதை கதைக்களமாக கொண்டு வெளியான திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’. விபுல்ஷா தயாரிப்பில் இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கியா தி கேரளா ஸ்டோரி திரைப்படம் கடந்த மே மாதம் 5ம் தேதி இந்தியா முழுவதும் இந்தி, தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியானது. அடா சர்மா, சித்தி இதாணி, தேவ தர்ஷினி உள்ளிட்டோர் இப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் முன்னோட்டம் முன்னதாக வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கியது. தமிழ் நாடு, கேரளா மற்றும் வங்க தேச மாநிலங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்புகள் எழுந்தது. பின் சர்ச்சைகளுக்கிடையே திட்டமிட்டபடி இப்படம் கடந்த மே 5 ம் தேதி வெளியாகியது. தமிழ் நாட்டில் இப்படத்தை மக்களின் வரவேற்பு இல்லாததால் திரையரங்க உரிமையாளர்களே ஒரே நேரத்தில் தூக்கினர். வங்க தேச மாநிலங்களில் இப்படத்திற்கு தடையும் விதித்தனர்.
இது ஒரு புறம் இருக்க வடஇந்திய பகுதிகளில் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு அரசியல் பிரமுகர்கள் ஆதரவு தெரிவித்து இப்படத்திற்கு வரிவிலக்கும் செய்தனர். வட இந்தியாவில் கிடைத்த வரவேற்பையடுத்து கடந்த மே 12ம் தேதி தி கேரளா ஸ்டோரி திரைப்படம் 37 நாடுகளில் வெளியானது. இந்நிலையில் திரைப்படம் வெளியாகி 17 நாட்களில் உலகளவில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் ரூ 200 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது. இதனை படக்குழு தமிழ்நாடு மற்றும் வங்கதேசம் தவிர முதல்முறையாக பெண்களை மையப்படுத்தி உருவான இப்படம் ரூ200 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது என்று அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு சில மாநிலங்களில் இருந்து எழுந்த எதிர்ப்பு மற்றும் தடை குறித்து கங்கனா ரனாவத் அவர்களிடம் பத்திரிக்கையாளர் கேட்கையில்,
“தணிக்கை வாரியத்தினால் சான்றளிக்கப்பட்ட ஒரு திரைப்படத்தை தடை செய்வது அரசியலமைப்பை அவமதிக்கும் செயலாகும். அது சரியானது அல்ல. ஒரு திரைப்படதிற்கு மத்திய அரசின் சென்சார் போர்டு ஒப்புதல் அளித்த பின் அதை எதிர்க்க கூடாது. தி கேரளா ஸ்டோரி போன்ற திரைப்படங்கள் உருவாகும் போது தான் மக்களின் குறை தீர்க்கப் படுகிறது. இது போன்ற படங்கள் அதிகம் எடுக்கவேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.” என்று தெரிவித்தார்.
சர்ச்சைகளுக்கு இடையே தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு வரவேற்பு ஒருபுறம் பெருகி வருவது நிதர்சனம் என்ற கருத்துகளை தெரிவித்து ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.