கடந்த 2018 ல் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்திற்கு பின் அப்படத்தின் நாயகன் பிரபாஸ். தென்னிந்தியா மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு பான் இந்திய ஸ்டாராக வலம் வந்தார். பாகுபலி படத்திற்கு பின் பெரிய பட்ஜெட் படங்களில் மட்டுமே நடிக்க தொடங்கினார் நடிகர் பிரபாஸ். அதன்படி அவர் நடித்து வெளியான சாஹோ, ராதே ஷ்யாம் ஆகிய படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய தோல்வியை பெற்றது. அதை தொடர்ந்து பிரம்மாண்ட தயாரிப்பில் இராமாயணத்தை தழுவி தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்திய அளவு உருவான ‘ஆதிபுருஷ்’ படத்தில் ராமானாக நடித்தார் பிரபாஸ். இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பின் மத்தியில் உருவான இப்படம் கடந்த ஜூன் மாதம் தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நாடு முழுவதும் வெளியானது.
ரசிகர்களின் ஆரவாரத்துடன் வெளியான ஆதிபுருஷ் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூல் அளவில் பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைத்தது. இருந்து படத்தின் பட்ஜெட்டை தொடுவதில் சிக்கலில் உள்ளது. பாகுபலியை காட்டிலும் சுமாரான வரவேற்பையே ஆதிபுருஷ் திரைப்படம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து பிரபாஸ் தற்போது மற்றுமொரு பிரம்மாண்ட பட்ஜெட் படத்தில் நடித்து வருகிறார். இந்தி மற்றும் தெலுங்கில் Sci Fi திரைப்படமாக உருவாகும் ‘புரோஜக்ட் கே’ என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தில் பிரபாஸுடன் இணைந்து உலகநாயகன் கமல் ஹாசன், பாலிவுட் நடிகர்கள் தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன் ஆகியோர் நடித்து வருகின்றனர். படத்திற்கு இசையமைக்கிறார் சந்தோஷ் நாராயணன். நிச்சயம் இந்த திரைப்படம் பிரபாஸ் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படமாக அமையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
இதனிடையே நடிகர் பிரபாஸ் நடித்து வரும் திரைப்படம் ‘சலார்’. ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் கேஜி எஃப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்க மேலும் மலையாள நடிகர் பிரித்வி ராஜ் மிரட்டலான வில்லனாக நடிக்கிறார். மேலும் இவர்களுடன் ஸ்ருதி ஹாசன், ஜெகபதிபாபு, மது குருசாமி, ஈஸ்வரி ராவ், ஸ்ரியா ரெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் ஒளிப்பதிவாளர் புவன் கௌடா ஒளிப்பதிவு செய்ய உஜ்வல் குல்கர்னி படத்தொகுப்பு செய்கிறார் மேலும் சலார் படத்திற்கு இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார். அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகி நாடு முழுவதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை கொண்டிருக்கும் சலார் திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 28ம் தேதி தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகரித்து கொண்டே வரும் சலார் படத்தின் டீசர் வெளியீட்டு குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு. இதற்காக வெளியிடுட்டுள்ள சிறப்பு போஸ்டரின் படி, பிரம்மாண்ட சலார் பட டீசர் வரும் ஜூலை 6ம் தேதி காலை 5.12ம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளது. தற்போது இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே மிகபெரிய அளவு வைரலாகி வருகிறது. மேலும் பிரபஸின் திரையுலக மார்கெட்டை மேலும் உயர்த்த இப்படம் வழிவகை செய்யும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.