தனித்துவமான இசைகளினால் ரசிகர்களின் மனதை பல தசாப்தங்களாக ஆட்கொண்ட பிரபலங்களில் மிக முக்கியமானவர் இசையமைப்பாளர் வித்யாசாகர். ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட இவர் பாரம்பரியமாக இசையை ஆராதிக்கும் குடும்பத்தில் பிறந்தவர். தன் பால்ய காலத்திலிருந்தே பல இசை கருவிகளை முறையாக கற்று தேர்ந்தவர். மேலும் அவரது 14 வயதிலிருந்தே அவர் ஜாம்பவான்களான எம் எஸ் விஸ்வநாதன், இளையராஜா உள்ளிட்ட பல முக்கிய இசையமைப்பாளர்களிடம் பணியாற்றிய அனுபவமும் பெற்றவர் . 80 களில் தமிழ் துறையில் அறிமுகமாகி பின் தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்தவர் வித்யாசாகர். 1989 ‘பூமணம்’ படத்தில் அறிமுகமான வித்யாசாகர் 1994 ல் வெளியான ‘ஜெய்ஹிந்த்’ திரைப்படம் மூலம் தான் தமிழ் மக்களுக்கு பரிச்சையமானர். இளையராஜா, ஏ ஆர் ரஹ்மான் உச்சத்தில் இருந்த நேரத்தில் மற்றும் தேவா, எஸ் ஏ ராஜ் குமார், யுவன் சங்கர் ராஜா ஆகியோர் வருகையிலும் தனித்து தெரிந்தவர். ஆரம்பத்தில் தமிழில் வரவேற்பு கிடைக்காமல் இருந்த வித்யாசாகர் மலையாளத்திலும் தெலுங்கிலும் பிரபலமானார். அதன் பின் தமிழில் 90 பிற்பகுதியில் கவனம் பெற, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜித், மாதவன், அர்ஜூன், விக்ரம், ஜீவா, ஷாம் உள்ளிட்டோருக்கு இசையமைத்து உச்சம் பெற்றார்.
அதன்படி கிட்டத்தட்ட 100 க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்த வித்யாசாகர் 80 களில் பின் பிறந்தவர்களின் மனதை ஆட்கொண்டார். எந்தவித பிரிவு இசையாக இருந்தாலும் சட்டென ரசிகர்களுக்கு பிடித்தது போல் இசையமைத்து கொடுக்கும் திறமையானவர் வித்யாசாகர். தெலுங்கு திரையுலகில் மிகப் பிரபலமான வித்யாசாகர் தமிழ் சினிமா ரசிகர்களையும் விட்டு வைக்காமல் தன் இசையினால் வசப்படுத்தினார். அதே நேரத்தில் மலையாளம் இந்தியிலும் காலடி எடுத்து வைத்து வெற்றி கண்டார்.
இவர் இசையில் தமிழ் ரசிகர்களுக்கு நெருக்கமான பல படங்கள் இருந்தாலும் ரசிகர்களின் நினைவில் உடனே வரும் படங்களாக கில்லி, தூள், ஜெய்ஹிந்த், திருமலை, அன்பே சிவம் சந்திரமுகி , படையப்பா ஆகியவை இருக்கும். இவர் இசையில் 90 களில் பிற்பகுதியில் வெளியான பெரும்பாலான படங்களின் பாடல்கள் ஆல்பம் ஹிட் அடித்தது. அதுவும் குறிப்பாக மேலடி பாடல்கள் ரசிகர்கள் குதூகலிக்கும் அளவு இருக்கும். அதனாலே ‘மேலாடி கிங்’ என்று அழைக்கபடுகிறார்.
எப்படி ஒரு காட்சியாக இருந்தாலும் அதை சற்று பார்வையாளர்களின் ரசனைக்கு ஏற்றி கொடுக்க இவர் இசை பல படங்களுக்கு உதவியது. உதாரணமாக ரஜினி பாபா படத்தில் வீழ்ந்த போது சந்திரமுகி பாடல்களை பட்டிதொட்டி எங்கும் ஒலிக்கவிட்டு சந்திரமுகியை பரவலாக கொண்டு சென்றவர் வித்யாசாகர். பாடலும் படத்திற்கு ஒரு வெற்றியாக இருந்தது. இன்றும் விஜய் ரசிகர்கள் கொண்டாடி குதூகலிக்கும் ‘கில்லி’ திரைப்படத்தில் இவரது பங்கு இல்லையென்றால் இளைய தளபதி தளபதி என்று வந்தடையும் நேரம் சற்று தமாதமாகியிருக்கும். கதை நாயகனாக இருந்த விக்ரம் கமர்ஷியல் ஸ்டாராக வளர்ந்தது தில், தூள் ஆகிய படங்களில் தான். அப்படங்களுக்கு இசை வித்யாசாகர் தான். இப்படி பட்டியலை அடுக்கி கொண்டே போகலாம். பல உச்ச நட்சத்திரங்கள் மேலும் உச்சம் தொட உதவிய படங்களை எடுத்து பார்த்தால் இவர் அங்கே இசையமைப்பாளராக இருப்பார். வித்யாசாகரின் பயணத்தில் திரை வேகம் அவரது பாடல்கள் மூலம் மேலும் உயர்ந்து கொண்டே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் வித்யாசாகரின் பிறந்தநாளை ரசிகர்கள் இணையத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர். அவர்களுடன் இணைந்து கலாட்டா மீடியாவும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறது.