கழுகு படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களால் அங்கீகரிக்கப்பட்டவர் நடிகை பிந்து மாதவி. அதன் பின், கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஆகிய படங்கள் இவரது திரைப்பயணத்திற்கு கைக்கொடுத்தது. பின் பட வாய்ப்புகள் அதிகம் இல்லாத போது தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 1ல் கலந்து கொண்டார். இதன் மூலம் மக்கள் மனதில் நன்கு பதிந்த பிந்து மாதவி அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின் அவருக்கு பட வாய்ப்புகள் வந்தன.
இறுதியாக 2019ம் ஆண்டு கிருஷ்ணா நடிப்பில் வெளியான கழுகு இரண்டாம் பாகத்தில் நடித்திருந்தார். தற்போது ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் உருவாகி வரும் யாருக்கும் அஞ்சேல் என்ற படத்தில் நடித்து வருகிறார். புரியாத புதிர் மற்றும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தைத் தொடர்ந்து முழுக்க பெண்களை மையப்படுத்தி த்ரில்லர் படமான யாருக்கும் அஞ்சேல் படத்தை இயக்கிவருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாகவும் முடித்து, இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் துவங்கி இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் STR இணைந்து படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை வெளியிட்டனர். இத்திரைப்படத்தை தேர்ட் ஐ என்டர்டெயின்மெட் நிறுவனம் தயாரிக்கிறது. பிந்து மாதவி மற்றும் தர்ஷனா பானி இருவரும் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
முழுக்க முழுக்க ஊட்டி பின்னணியில் படமாக்கப்பட்டுள்ளது. சுமார் 30 நாட்களில் முழு படப்பிடிப்பையும் முடித்துவிட்டது படக்குழு.சமீபத்தில் பிந்து மாதவியின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு சர்ப்ரைஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டது. தற்போது படத்தின் டப்பிங் பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. பிந்து மாதவி தன் சொந்த குரலில் பேசி நடித்துள்ளார்.
லாக்டவுனில் பல திரைப்படங்களில் போஸ்ட் ப்ரோடக்ஷன் மற்றும் டப்பிங் பணிகள் நடைபெறுவதை பார்க்க முடிகிறது. அரசு அனுமதியுடன் குறைந்த பட்ச ஆட்கள் கொண்டு பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி பகிர்ந்த டப்பிங் புகைப்படத்தின் கீழ் ட்ரைலர் மற்றும் டீஸர் அப்டேட்டை கேட்டு வருகின்றனர் ரசிகர்கள். இந்த படத்தை தொடர்ந்து மாயன் என்ற படத்தில் நடிக்கவுள்ளார் பிந்து மாதவி.