நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த இளைஞர் மீண்டும் மாணவியைக் கடத்த முயன்றபோது பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள இந்திரா காலணி பகுதியைச் சேர்ந்த 23 வயதான ஜெயராம், கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் உள்ள எஸ்டேட்டில் பணியாற்றி வந்தார். இவருக்கும், கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள கருங்கல் பகுதியைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவிக்கும் பேஸ்புக் மூலமாகப் பழக்கம் ஏற்பட்டு, காதல் மலர்ந்துள்ளது. இதனையடுத்து, கடந்த ஜூன் மாதம் 21 ஆம் தேதி, பள்ளிக்குச் சென்ற மாணவி வீடு திரும்பாததால், அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த கருங்கல் போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த மாணவியின் செல்போனை ஆராய்ந்தபோது, ஜெயராம் என்ற இளைஞர் பற்றித் தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து ஜெயராம் செல்போன் எண்ணை வைத்து அவரை, கர்நாடக மாநிலம் குடகு எஸ்டேட்டில் வைத்து கைது செய்தனர்.
அப்போது, மாணவியைக் கடத்திச் சென்று 5 நாட்கள் அந்த பெண்ணுடன் குடும்பம் நடத்தியதாக அவர் ஒப்புக்கொண்டார். பின்னர், ஜெயராம் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும், மாணவியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, சிறையிலிருந்து நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த ஜெயராம், மீண்டும் மாணவியைக் கடத்தும் நோக்கத்தோடு அவரது பள்ளிக்கே சென்றுள்ளார். பள்ளி வகுப்பறையில், ஆசிரியரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி மாணவியை தன்னுடன் அனுப்புமாறு மிரட்டி உள்ளார். பயத்தில் ஆசிரியர் கத்தி கூச்சலிடவே, சக ஆசிரியர்களும், பள்ளி ஊழியர்கள் ஓடி வந்துள்ளனர். இதனைக் கண்ட ஜெயராம், அங்கிருந்து தப்பி ஓட முயன்றுள்ளார்.
அப்போது அந்த பகுதியில் நடந்து சென்ற பொதுமக்கள் அவரை விரட்டி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதனையடுத்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில், மீண்டும் பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், மீண்டும் ஜெயராமை சிறையில் அடைத்தனர்.