இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் இன்று வெளியாகும் திரைப்படம் "ஜகமே தந்திரம்". ரசிகர்களின் எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு இடையில் நேரடியாக நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் இன்று வெளியாகிறது. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசையில் ஷ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில் தயாராகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படத்தை Y NOT ஸ்டூடியோஸ் தயாரிப்பாளர் சசிகாந்த் தயாரித்துள்ளார்.
சுருளி என்ற கதாபாத்திரத்தில் மிரட்டலான கேங்ஸ்டராக நடிகர் தனுஷ் நடித்திருக்கும் இத்திரைப்படத்தில் பிரபல மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் மற்றும் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். முன்னதாக இத்திரைப்படத்தின் டீசர்,டிரைலர் மற்றும் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் நேற்று படக்குழு வெளியிட்ட மேக்கிங் வீடியோ தற்போது இன்னும் எதிர்பார்ப்புகளை எகிற வைத்திருக்கிறது.
அடுத்ததாக நடிகர் தனுஷ் அவெஞ்சர்ஸ் எண்டு கேம் திரைப்படத்தை இயக்கிய முன்னணி ஹாலிவுட் இயக்குனர்களான ரூசோ பிரதர்ஸ் இயக்கும் தி க்ரே மேன் எனும் ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அவெஞ்சர்ஸ் சூப்பர் ஹீரோ கதாபாத்திரமான கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் கிரிஸ் எவென்ஸுடன் நடிகர் தனுஷ் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்புகள் அமெரிக்காவில் நடைபெற்று வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு நடிகர் தனுஷின் பகுதி காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு படப்பிடிப்பு முடிவடைந்தது.
இந்நிலையில் இன்று வெளியாக இருக்கும் ஜகமே தந்திரம் திரைப்படத்திற்காக நடிகர் தனுஷுக்கு ரூசோ பிரதர்ஸ் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்கள்.இது குறித்து ட்விட்டரில் பதிவிட்ட ரூசோ பிரதர்ஸ் தமிழில் “சூப்பர் டா தம்பி” என குறிப்பிட்டு தனுஷோடு பணியாற்றியது உற்சாகம் அளிப்பதாகவும் ஜகமே தந்திரம் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்தி பதிவிட்டுள்ளனர். ரூசோ பிரதர்ஸ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் தி க்ரே மேன் திரைப்படமும் நேரடியாக நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Super da thambi! Excited to be working with @dhanushkraja and good luck with #JagameThandhiram @karthiksubbaraj @StudiosYNot
— Russo Brothers (@Russo_Brothers) June 17, 2021
Watch the trailer HERE: https://t.co/ERrt7vfNy8