அதிக பொருட்செலவில் ஒரு படத்தை தரமாக எடுத்து அதைவிட பல மடங்கு வியாபாரம் பார்க்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்று மார்வல் ஸ்டுடியோ. அந்நிறுவனத்தின் மிக முக்கியமான திரைப்படம் என்றால் ‘தி அவெஞ்சர்ஸ்’. அந்த திரைப்படத்தை தொடர்ந்து உருவாக்கபட்ட ‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்’ மற்றும் ‘அவெஞ்சர்ஸ் எண்டு கேம்’ திரைப்படங்கள் உலகளவில் வசூல் சாதனை செய்து தனக்கென்ற ஒரு இடத்தை பிடித்து பெருமை பெற்றுள்ளது. உலகளவில் பல கோடி ரசிகர்களை மார்வெல் ஸ்டுடியோ தக்க வைத்துள்ளது.
இப்படங்களில் ஹாக்காய் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த ஜெர்மி ரென்னர் கடந்த புத்தாண்டின் போது குடியிருப்பு பகுதிகளில் பொழிந்த பணியை அகற்றும் போது விபத்துக்குள்ளானார். விபத்தில் படுகாயமடைந்து உயிர் தப்பிய ஜெர்மி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ரென்னரின் மார்பு பகுதியிலும், இன்னும் சில இடங்களில் காயங்களும் ஏற்பட்டுள்ளதால் அதற்கான அறுவை சிகிச்சைகள் முடிந்துள்ளது. தற்போது அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறார். நடிகர் ஜெர்மி ரென்னர் தற்போது சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார்.
அதனுடன் “காலை உடற்பயிற்சிகள், தீர்மானங்கள் அனைத்தும் இந்த புத்தாண்டை முழுவதும் மாற்றியது, முழு குடும்பத்தையும் சோகத்திலிருந்து விடுவிப்பதற்காக, விரைவில் செயல்படக்கூடிய அன்பை ஒன்றிணைப்பதில் கவனம் செலுத்துகிறேன்.. எனது குடும்பத்திற்காகவும் எனக்காகவும் உங்களிடமிருந்து வந்த செய்திகள் மற்றும் சிந்தனைகளுக்கு உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் எனது அன்பும் பாராட்டும்.. இந்த 30-க்கும் மேற்பட்ட உடைந்த எலும்புகள், குடும்பம் மற்றும் நண்பர்களுடனான அன்பும் பிணைப்பும் ஆழமடைவதைப் போலவே, வலுவடையும். உங்கள் அனைவருக்கும் அன்பும் ஆசிகளும்..” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து சக அவெஞ்சர்ஸ் நடிகர்களான கிரிஸ் எவன்ஸ் , கிரிஸ் ஹெம்ச்வோர்த் மற்றும் இயக்குனர் ஜேம்ஸ் கன் உள்ளிட்டோர் தனது அன்பை கமெண்டுகளில் பகிர்ந்துள்ளனர். மேலும் ஜெர்மியின் இந்த நெகிழ்சியான பதிவு ரசிகர்கள் அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.
ஹாலிவுட் நடிகர் ஜெர்மி ரென்னர் டாம் குரூஸ் நடித்த பிரபல திரைப்படமான ‘மிஷன் இம்பாசிபல்’ தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர். இவர் மேலும் பல படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் உலகளவில் இவர் மார்வெல் ஸ்டுடியோவின் அவெஞ்சர்ஸ் ஹாக்காயாவே புகழ்பெற்றார். கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட இவருக்கு பலதரப்பட்ட மனிதர்களிடமிருந்து பிராத்தனைகளும் வாழ்த்துகளும் வந்த வண்ணம் உள்ளது.