தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து ரசிகர்களின் பொழுதுபோக்கிற்கு தரமான தீனி போடும் நடிகராக வலம் வருபவர் நடிகர் அருள்நிதி. முதல் படம் தொடங்கி இன்று வரை ஒவ்வொரு படத்திற்கும் வித்யாசம் காட்டும் அருள்நிதி. தற்போது முழு கிராம பின்னணியில் ஆக்ஷன் திரைப்படமாக ஜோதிகாவின் ராட்சசி படத்தை இயக்கிய இயக்குனர் சை.கௌதமராஜ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘கழுவேத்தி மூர்க்கன்’. கவின் நடிப்பி வெளியாகி பிளாக் பஸ்டர் வெற்றி பெற்ற டாடா படத்தை தொடர்ந்து அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஒலிம்பியா மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் S.அம்பேத்குமார் தயாரிப்பில் உருவான இப்படத்தில் அருள்நிதி, துஷாரா விஜயன், சந்தோஷ் பிரதாப், சாயாதேவி, முனீஸ்காந்த், ராஜசிம்மன் ஆகியோர் கழுவேத்தி மூர்க்கன் திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட்ட இப்படத்திற்கு ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்ய, நாகூரான் படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும் படத்திற்கு D.இமான் இசையமைக்க, பாடல்களை கவிஞர் யுகபாரதி எழுதியுள்ளார்.
கடந்த மே 26 ம் தேதி வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்பை முழுமையாக பூர்த்தி செய்த கழுவேத்தி மூர்க்கன் திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் படத்தில் அருள் நிதி – துஷாரா விஜயன் இருவருக்குமிடையே வரும் காதல் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. பக்காவான கிராம பின்னணியில் உருவான கழுவேத்தி மூர்க்கன் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள இந்த காதல் காட்சி தற்போது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.
தொடர்ந்து படத்திற்கு படம் வித்யாசமான கதைகளை தேர்ந்தெடுத்து அதில் தனித்துவமான நடிப்பை வெளிபடுத்தி வரும் அருள்நிதி நடிப்பில் இந்த ஆண்டு திருவின் குரல் திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது. அப்படத்தை தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள கழுவேத்தி மூர்க்கன் திரைப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் அருள்நிதி தற்போது அவரது திரைப்பயணத்தில் மிக முக்கியமான திரைப்படமாக இடம் பெற்றிருக்கும் டிமாண்டி காலனி படத்தின் இரண்டாவது பாகத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.