இந்திய திரையுலகின் பெருமைமிகு கலைஞர்களில் முக்கியமானவர் ஏ ஆர் ரஹ்மான். 90களின் பிற்பகுதியில் அறிமுகமான இவர் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட அனைத்து இந்திய மொழி படங்களிலும் பணியாற்றி தனக்கென தனி சாம்ராஜ்யத்தையே உருவாக்கி வைத்துள்ளார். ஏ ஆர் ரஹ்மான் இசை என்றாலே தனி ஆவல் என்ற ரசிகர் கூட்டம் காலம் காலமா இருந்து வருகிறது. அவரும் காலத்திற்கேற்ப தன் இசையில் புதுமைகளை புகுத்தி ரசிகர்களை ஆச்சர்யபடுத்தி வருகிறார். அதன்படி இந்த ஆண்டு தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன் 2', சிலம்பரசனின் 'பத்து தல', மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'மாமன்னன்' ஆகிய திரைப்படங்களின் பாடல்கள், இசையை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். அதன்படி அவரது இசையில் தமிழில் ஐஸ்வர்ய ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் 'லால் சலாம்' மற்றும் சிவகார்த்திகேயனின் Sci-Fi படமான 'அயலான்' ஆகிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளது.
இதனிடையே இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், திரைப்படங்களைத் தாண்டி பல நாடுகளில் தனது இசைக் கச்சேரியை பிரம்மாண்டமாக நடத்தி வருகிறார். மிகப்பெரிய ரசிகர் கூட்டத்துடன் அரங்கேறும் இந்த நிகழ்ச்சி சில நிமிடங்களிலேயே டிக்கெட் விற்பனையாகி சாதனை படைத்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 'மறக்குமா நெஞ்சம்' என்ற தலைப்பில் பிரம்மாண்ட இசை கச்சேரியை ஏ ஆர் ரஹ்மான் இன்று சென்னையில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் தொடர்ந்து வெளிநாடுகளிலும் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது.
இதையடுத்து இன்று சென்னையில் நடைபெறவிருந்த கச்சேரியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் எதிர்பார்த்து அரங்கத்திற்கு வருகை தர துவங்கியுள்ளனர். இந்நிலையில் ரசிகர்களை ஏமாற்றமடையும் வைக்கும் வகையில் சென்னையில் மழை பெய்து வருவதால் இன்று நடைபெறவிருந்த மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது. இசைக் கச்சேரி நடைபெற இருந்த அரங்கில் மழை காரணமாக நீர் தேங்கியதால் ரத்து செய்யப்பட்டுள்ளது என நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் சோகத்தில் தற்போது அரங்கிலிருந்து வீடு திரும்பி வருகின்றனர்..
இது தொடர்பாக ஏ.ஆர் ரஹ்மான், "அன்பான நண்பர்களே... மோசமான வானிலை மற்றும் தொடர் மழையின் காரணமாக, எனது ரசிகர்கள் மற்றும் நண்பர்களின் ஆரோக்கியம், பாதுகாப்பிற்காக இசை நிகழ்ச்சி வேறொரு தேதிக்கு மாற்றப்படுகிறது. புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும்" என ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து ரசிகர்கள் அவரது பதிவை சோகத்துடன் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர். மேலும் ரசிகர் ஒருவர் அந்த பதிவின் கீழ், ஒரு ரசிகர் மதுரையிலிருந்து வந்ததாக வருத்ததுடன் தெரிவித்து பதிவிட்டு இருந்தார். இதையடுத்து ஏ ஆர் ரஹ்மான், அந்த பதிவை பகிர்ந்து, “நமது அரசாங்கத்தின் உதவியுடன் பெரிய நிகழ்ச்சிகளுக்கு சர்வதேச அனுபவங்களுக்கான பாதுகாப்பான அடுத்த கட்ட உள்கட்டமைப்பு வசதியை கொண்ட அரங்கை சென்னைக்கு உருவாக்குவோம் என்று நம்புகிறேன். பிரார்த்தனையும் செய்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து ஏ ஆர் ரஹ்மான் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
I hope and pray that ..with the help of our government..we construct the next level infrastructure for art,mega shows and international experiences for Chennai #SafetyFirst #rain-resistant #sun-resistant #cluttterfreeparking #notrafficjams https://t.co/8QpwN56mYs
— A.R.Rahman (@arrahman) August 12, 2023