இசையுலகின் இசைப்புயலாக திகழ்பவர் ஏ.ஆர். ரஹ்மான். பிகில் படத்திற்கு பிறகு சியான் விக்ரம் நடிக்கும் கோப்ரா, சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான், மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் போன்ற படங்களின் இசையமைப்பு பணிகளில் பிஸியாக உள்ளார். உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவிருக்கும் தலைவன் இருக்கின்றான் படத்தில் கூட பணியாற்றவிருக்கிறார்.
ஜூன் 26-ம் தேதியான இன்று உலகமெங்கும் சர்வதேச போதைப்பொருள் உபயோகம் மற்றும் கடத்தலுக்கு எதிரான நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. போதைப் பொருட்களுக்கு எதிராகப் பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் கருத்துகள் வெளியிட்டு வருகிறார்கள். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஒரு வீடியோவை வெளியிட்டார். இதைத்தொடர்ந்து தற்போது தமிழக அரசின் காவல்துறையினருடன் இணைந்து இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானும் வீடியோ ஒன்றைத் அவருடைய யூ டியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், போதைப்பொருள் பயன்படுத்துதல் மற்றும் கடத்தல் இதற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டிய நாள். இன்றைய நிலையில் நம் எல்லோருக்கும் விழிப்புணர்வு அவசியம். இந்த கோவிட்-19 வைரஸ் தாக்குதலிலிருந்து விரைவில் மீண்டுவிடலாம். ஆனால், போதைப் பொருட்களுக்கு அடிமையாகிவிட்டால் மீள்வது சிரமம்.
போதைப்பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் பயங்கரமானவை. தீய எண்ணங்களையும், கெட்ட நடத்தைகளையும் உருவாக்கும். பலர் வாழ்க்கை அழிந்துவிடும். கொடூரக் குற்றங்கள், வன்கொடுமை, சிறுவர்களின் வாழ்க்கைச் சீரழிவு போன்ற பல்வேறு தீய செயல்கள் போதைப் பொருட்கள் பயன்பாட்டால் ஏற்படும் விளைவுகள். எனவே, போதைப் பொருட்கள் பயன்படுத்துவதைத் தவிர்ப்போம், தடுப்போம். இளைய தலைமுறையைக் காப்பாற்றுவோம் என ஒவ்வொருவரும் சபதம் எடுத்துக் கொள்வோம் என்று பேசியுள்ளார்.
இளம் சமுதாயத்தினரால் அதிகம் விரும்பப்படுபவர் ஏ.ஆர். ரஹ்மான். பலருக்கு இவரது இசையே மருந்தாக இருந்து வருகிறது. இப்படியிருக்க இதுபோன்ற நற்செயல்களில் ஈடுபட்டு, உதாரணமாக விளங்குகிறார் நம் இசைப்புயல்.