சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கும் ஜெயிலர் திரைப்படத்திலிருந்து புதிய சர்ப்ரைஸ் வீடியோ ஒன்றை ராக்ஸ்டார் அனிருத் தற்போது வெளியிட்டு இருக்கிறார். தர்பார் மற்றும் அண்ணாத்த ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பெரிய அளவில் பூர்த்தி செய்யாத நிலையில் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் தரமான சம்பவம் செய்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தனது பீஸ்ட் திரைப்படத்திற்கு பிறகு எக்கச்சக்கமான எதிர்மறை விமர்சனங்களை சந்தித்த இயக்குனர் நெல்சன் ஜெயிலர் திரைப்படத்தில் பதிலடி கொடுத்திருக்கிறார். ஜெயிலர் திரைப்படம் கைவிடப்பட்டது என சொல்லும் அளவிற்கு சமூக வலைதளங்களில் எதிர்மறையான விமர்சனங்கள் அதிகமாக பரவிக் கொண்டிருந்த சமயத்தில் ட்விட்டரில் தலைவர் 169 எனக் குறிப்பிட்டு அமைதியாக தனது படத்தில் கவனம் செலுத்தி தற்போது சூப்பர் ஸ்டாரை வைத்து செம்ம மாஸ் என்டர்டெய்னர் கொடுத்த இயக்குனர் நெல்சனின் இந்த வெற்றியை தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சூப்பர் ஸ்டாருடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி, யோகி பாபு, மலையாள விநாயகன், மிர்னா மேனன் உட்பட பலர் நடித்துள்ளனர். இதுபோக மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவ ராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் ஜெயிலர் திரைப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில், நிர்மல் படத்தொகுப்பு செய்ய, அனிருத் இசையமைத்துள்ளார். பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ஜெயிலர் படம் ரிலீஸானது. ரிலீஸான வெறும் 4 நாட்களில் வெளிநாடுகளில் மட்டும் 105 கோடி ரூபாய் வசூலித்த ஜெயிலர் திரைப்படம் முதல் வாரத்தில் இறுதியில் 375.40 கோடி ரூபாய் வசூலுக்கு மிகப்பெரிய சாதனை படைத்திருக்கிறது.

தொடர்ந்து ரிப்பீட் மூட்டில் ரசிகர்கள் ஜெயிலர் திரைப்படத்தை கொண்டாடி வருவதால் வரும் நாட்களில் இன்னும் பெரிய வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் புதிய உச்சத்தை எட்டும் ஜெயிலர் திரைப்படம் தமிழ் சினிமாவில் இண்டஸ்ட்ரி ஹிட்டாக மாறும் என தெரிகிறது. இந்த நிலையில் ராக் ஸ்டார் அனிருத் அவர்கள் தற்போது வெளியிட்டு இருக்கும் புதிய வீடியோ ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஜெயிலர் திரைப்படத்தில் தந்தை மகன் பாசத்தை அழகாய் பேசிய ஒரு பாடல் ரத்தமாறே. விக்னேஷ் சிவன் எழுதிய இந்த பாடலை பிரபல பாடகர் விஷால் மிஸ்ரா பாடியிருந்தார். வெளியான சமயத்தில் இருந்தே ரசிகர்களின் மனதை வென்ற இந்த பாடலை பாடகர் விவேக் மிஸ்டரா பாட, அனிருத் பியானோ வாசிக்க, பிரபலமான கிட்டார் இசை கலைஞர்களான கேபா ஜெரமியா மற்றும் சத்யஜித் சத்யா ஆகியோர் கிட்டார் வாசிக்கும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அசத்தலான அந்த வீடியோ இதோ…