இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் கடந்த 2010 ல் வெளியாகி ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘அங்காடித் தெரு’. இப்படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து பிரபலமடைந்தவர் நடிகை சிந்து. பல நாட்களாக மார்பக புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு வந்த நடிகை சிந்து இன்று அதிகாலை 2.15 மணியளவில் காலமானார்.
குழந்தை பருவத்தில் இருந்தே திரைப்படங்களில் நடித்து வந்தவர் நடிகை சிந்து. தன் அப்பாவுடன் சத்தியம் ஸ்டுடியோவில் சிறுசிறு வேலைகளை செய்து வந்தார். பின் வறுமை ஒருபுறம் சூழ சிறு வயதில் இருக்கும்போதே தன் தாய் இறந்துள்ளார் இதையடுத்து 14 வயதிலே நடிகை சிந்துவிற்கு திருமணம் நடந்தது . திருமண வாழ்விலும் கஷ்டங்களை மட்டுமே அனுபவித்து வந்த சிந்து பின் கணவரை பிரிந்து தன் தந்தையுடன் குழந்தைகளை வளர்த்து வந்துள்ளார். குடும்பம் சூழல் காரணமாக மீண்டும் திரைப்படங்களில் நடிக்க முன் வந்தார். அதன்பின் திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்துள்ளார்.
இதையடுத்து நடிகை சிந்து வெகுஜன மக்களிடம் கொண்டு சேர்த்த திரைப்படம் என்றால் அது அங்காடித் தெரு தான். அப்படத்தில் சிறிய கதாபாத்திரம் தான் ஏறத்தாழ 4 காட்சிகள் இடம் பெற்றிருக்கும் அத்தனை காட்சிகளிலும் ரசிகர்களை தன் நடிப்பின் மூலம் கவர்ந்திருப்பார். குறிப்பாக இறுதி காட்சியில் நடிகை சிந்து பேசும் வசனங்கள் இன்றும் பலரை உருக வைக்கும். அதன் பின் நடிகை சிந்து ரசிகர்களால் அங்காடித் தெரு சிந்து என்றே அறியப்பட்டார்.
பின்னர் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்துள்ளார். அந்த நிலையில் அடிக்கடி உடல் நிலை மோசமடைந்ததையடுத்து நடிகை சிந்து மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மேற்கொண்டுள்ளார். அந்த பரிசோதனையில் அவருக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
சிகிச்சைக்கு அதிகளவு செலவு ஏற்பட திரைபிரபலங்களின் உதவியை நாடினார். அதன்பின் சில திரைபிரபலங்கள் மற்றும் ரசிகர்களிடம் இருந்து பண உதவி கிடைக்க மருத்துவமனையில் வலியுடன் சிகிச்சை மேற்கொண்டிருந்தார். பின் சிகிச்சையில் இரண்டு மார்பகங்களும் நீக்கப்பட்டது. மருத்துவ சிகிச்சை ஒருபுறம் வலி ஒருபுறம் என பல ஆண்டுகளாக வாழ்கையயை நகர்த்தி வந்த நடிகை சிந்து இன்று அதிகாலை 2.15 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவருடைய உடல் விருகம்பாக்கம் மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது. அவருடைய ஆன்மா சாந்தி அடைய திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்