மலையாள சினிமாவின் மீது இந்திய ரசிகர்களுக்கு எப்போதும் தனி ஆர்வம் உண்டு. அந்த வகையில் நேரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன், தனது இரண்டாவது படமாக அடுத்து இயக்கிய பிரேமம் திரைப்படம் இந்திய சினிமாவில் அனைத்து மொழி ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டானது.
இந்த வரிசையில் அடுத்ததாக இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் தயாராகியுள்ள திரைப்படம் கோல்ட். ப்ரித்திவிராஜ் மற்றும் நயன்தாரா முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள கோல்ட் திரைப்படத்தில் அஜ்மல், கிருஷ்ணா சங்கர், செம்பன் வினோத் ஜோஸ், ரோஷன் மேத்யூ, மல்லிகா சுகுமாரன், சுரேஷ் கிருஷ்ணா உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர்.
பிரித்விராஜ் புரோடக்சன்ஸ் மற்றும் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள, கோல்ட் படத்திற்கு ஆனந்த் சந்திரன்-விஸ்வஜித் ஒடுக்கத்தில் இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ளனர். ராஜேஷ் முருகேசன் இசையமைக்க, அல்போன்ஸ் புத்திரன் படத்தொகுப்பு செய்துள்ளார். முன்னதாக கடந்த செப்டம்பர் 9ம் தேதி ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோல்ட் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர்.
படவேலைகள் முழுவதும் முடிவடையாத நிலையில் கோல்ட் பட ரிலீஸ் தள்ளிப்போனது. இந்நிலையில், தற்போது ரிலீஸுக்கு தயாராகியுள்ள கோல்ட் திரைப்படம் வருகிற டிசம்பர் 1-ம் தேதி வெளியாகும் என தற்போது படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். முன்னதாக வெளிவந்த டீசர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள நிலையில் கோல்ட் படத்தின் டிரைலருக்காக தற்போது ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.