இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகளும் தமிழ் திரைப்பட இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், 3 திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். நடிகர் தனுஷ் மற்றும் நடிகை ஸ்ருதிஹாசன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த 3 படத்தில் தான் இசையமைப்பாளர் அனிருத் இசை அமைப்பாளராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த், டாப்ஸி & விவேக் ஆகியோர் இணைந்து நடிக்க ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளிவந்த வை ராஜா வை திரைப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. கடைசியாக கடந்த 2017 ஆம் ஆண்டு சினிமா வீரன் எனும் டாக்குமென்டரி படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியிருந்தார்.
சில தினங்களுக்கு முன்பு நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தம்பதியினர் தங்களது விவாகரத்தை அறிவித்தனர். இந்த நிலையில் தற்போது இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீண்டும் இயக்குனராக தனது புதிய படைப்பை வெளியிட முடிவு செய்து அதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.
காதலர் தினத்தன்று வெளியாகும் வகையில் புதிய மியூசிக் வீடியோவை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கவுள்ளார். இந்த மியூசிக் வீடியோவை பேஃபிலிம்ஸ் LLP தயாரிக்கிறது. இந்த மியூசிக் வீடியோவுக்கான ப்ரீ புரொடக்ஷன் பணிகளில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கலந்து கொண்டுள்ள புகைப்படங்களை பேஃபிலிம்ஸ் மற்றும் தயாரிப்பாளர் ப்ரேரனா அரோரா தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். அந்தப் புகைப்படங்கள் இதோ…