நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அரசின் கலைமாமணி விருது பெற்றதைத் தொடர்ந்து சென்னை சர்வதேச திரைப்படவிழாவிலும் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார். சிறந்த நடிகை என்ற அந்தஸ்த்தை எப்போதோ பெற்றுவிட்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு சென்னையில் நடைபெற்ற 18-ஆவது சர்வதேச திரைப்படவிழாவில் க/பெ ரணசிங்கம் படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வழங்கியதற்காக சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது.
சென்னை சர்வதேச 18-ஆவது திரைப்பட விழாவின் நிறைவு நாளான இன்று சிறந்த படங்கள் சிறந்த கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை க/பெ ரணசிங்கம் படத்தில் உணர்ச்சிப்பூர்வமாக நடித்து அனைவரது மனதிலும் நீங்கா இடம்பெற்ற ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இந்த விருதை வழங்கினார்கள்.
ஐஸ்வர்யா ராஜேஷின் கணவராக மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்திருந்த க/பெ ரணசிங்கம் படத்தை விருமாண்டி எழுதி இயக்கி இருந்தார். ஜீதிரையில் இப்படம் வெளியாகி நல்லவரவேற்பை பெற்றது.
இந்த விருதுபெற்றதை குறித்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறும்போது, உழைப்பிற்கான அங்கீகாரம் உரிய நேரத்தில் கிடைக்கும் போது அது பெரிய மகிழ்ச்சியைத் தரும். அந்த வகையில் இந்த விருதைப் பெற்றது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
க/பெ ரணசிங்கம் படத்தின் ஒட்டுமொத்த டீமிற்கு என் அன்பான நன்றி. மேலும் தமிழக அரசின் கலைமாமணி விருதும் சமீபத்தில் எனக்குக் கிடைத்தது. அதற்கு தமிழக அரசிற்கு நெஞ்சார்ந்த நன்றியைச் சொல்லிக்கொள்கிறேன். நல்லநடிகை என்ற அடையாளத்தை எனக்குள் ஊன்றிய ரசிகர்களுக்கு பேரன்பும் பெருநன்றியும்" என்றார்