விஷால் நடிப்பில் உருவாகிவரும் 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தின் முக்கிய அப்டேட் குறித்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழில் 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடித்திருந்த இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்திருந்தார். மேலும் இவர்களுடன் மனிஷா யாதவ், சிம்ரன், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். 'செக்ஸ் காமெடி' ஜானரில் உருவான இத்திரைப்படம் சினிமா விமர்சகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இதையடுத்து அவர் சிம்புவைக் கதாநாயகனாக வைத்து 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்'(AAA) திரைப்பத்தை இயக்கினார். இதில் சிம்பு மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். மேலும் அவருக்கு ஜோடியாக தமன்னா, ஸ்ரேயா ஆகியோர் நடித்திருந்தனர்.
இந்தப் படமும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறவில்லை. மேலும் அபத்தமான கதாபாத்திர அமைப்பு மற்றும் சுவாரசியமில்லாத திரைக்கதை ஆகிய விஷயங்களுக்காக 'AAA' கடும் விமர்சனங்களைச் சந்தித்தது. போதாத குறையாக இப்படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனும், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனும் கூட்டாக, சிம்பு படப்பிடிப்பின் போது தங்களுக்கு ஒத்துழைக்கவில்லை என்றும், தேவையற்ற காரணங்களுக்காக குறிப்பிட்ட நாட்களை விட படப்பிடிப்பை அதிகம் நீட்டித்தார் என்றும் புகார்களை அடுக்கினர்.
இந்த சர்ச்சைகளைத் தொடர்ந்துதான் ஆதிக் ரவிச்சந்திரன் பிரபுதேவாவை வைத்து பகீரா என்ற படத்தை இயக்கிமுடித்தார். படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து ஒருவருடம் முன்னதாக இப்படத்தின் டிரெய்லரும் வெளியான நிலையில், இதன் வெளியீடு தொடர்ந்து தள்ளிப்போய்க்கொண்டிருக்கிறது. நடனப்புயலாக அறியப்படும் பிரபுதேவாவை வித்தியாசமான கெட்அப்பில் இப்படத்தின் டிரெய்லரில் காட்சிப்படுத்தியிருந்தது அச்சமயம் பேசுபொருளாக ஆனது.
இந்நிலையில், தனது நான்காவது படமான 'மார்க் ஆண்டனி' குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் அப்டேட் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். விஷால் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் ரிதுவர்மா கதாநாயகியாக நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு அபிநந்தன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துக்கொள்கிறார் மற்றும் விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.
இப்படத்தின் முதல்பார்வை போஸ்டர் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் லுக் வெளியாகியிருக்கும் நிலையில், படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இதனிடையே 2023ல் 'மார்க் ஆண்டனி' படம் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று ஆதிக் ரவிச்சந்திரன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள் அவர், "அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். நாங்கள் உருவாக்கிவரும் மார்க் ஆண்டனி படம் குறித்த அறிவிப்புகளை வெளியிட ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன். துணிஞ்சா வெற்றி நமதே" என்று பதிவிட்டுள்ளார். இதையடுத்து மார்க் ஆண்டனி படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆதிக் ரவிச்சந்திரனின் ட்விட்டர் பதிவு உங்கள் பார்வைக்கு.