தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகைகளில் ஒருவரான நடிகை சரண்யா பொன்வண்ணன் அவர்கள் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகர்கள் பலருக்கும் அம்மாவாக மிகச் சிறப்பாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தவர். முன்னதாக இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் நடித்த நாயகன் திரைப்படத்தின் கதாநாயகியாக நடித்து சினிமாவில் நடிகையாக அறிமுகமான சரண்யா பொன்வண்ணன் அவர்கள், தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாகவும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்தாலும் கூட அம்மா கதாபாத்திரங்களில் அவர் நடிக்க தொடங்கிய பிறகு மக்கள் மத்தியில் மிகப்பெரிய கவனம் ஈர்த்தார்.
தளபதி விஜய், அஜித் குமார், சூர்யா, ராகவா லாரன்ஸ், தனுஷ், மாதவன், விமல், மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின், உதயநிதி ஸ்டாலின், விஷ்ணு விஷால், M.சசிகுமார், விஷால், சிவகார்த்திகேயன் என அனைத்து நட்சத்திர நாயகர்களுக்கும் அம்மாவாக நடித்த நடிகை சரண்யா பொன்வண்ணன் அவர்கள் நாளை டிசம்பர் 8ம் தேதி நடிகர் சதீஷ் நடிப்பில் வெளிவர இருக்கும் காஞ்சூரிங் கண்ணப்பன் திரைப்படத்தில் நடிகர் சதீஷ்க்கு அம்மாவாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பேட்டி கொடுத்த நடிகை சரண்யா பொன்வண்ணன் பல முக்கிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார் அந்த வகையில் பேசும் போது,
“ஒரு உதாரணத்திற்கு ஒரு ஃபிலிம் ஃபேர் விருது ஒரு முறையாவது நான் வாங்க வேண்டும் என்று என் அம்மா ஆசைப்பட்டார்கள். ஆனால் அந்த ஃபிலிம் ஃபேர் விருதுகளுக்கான அழைப்பிதழ் கூட எனக்கு வந்தது கிடையாது. விருது விழா நடக்கும் எனக்கு அழைப்பிதழே வராது. அப்போது என் அம்மா கேட்பார்கள், “என்ன ஹீரோயின் நீ உனக்கு ஒரு அழைப்புதல் கூட வரவில்லை நானும் ஒரு ஃபிலிம் ஃபேர் போய் பார்க்கலாம் என்று நினைக்கிறேன்” என்பார் நான் அப்போது இதைப் பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் என்னுடைய அம்மா சொல்லிக் கொண்டே இருப்பார். என்னுடைய அம்மா இறந்த பிறகு நான் வாழ்க்கையில் என்னென்ன ஜெயிக்க வேண்டும் என நினைத்தேனோ... எங்க அம்மா இருந்தவரையில், இதையெல்லாம் எங்கள் அம்மா தான் நினைத்தார்கள்... அவர்கள் இருந்தவரை அவை எதையுமே நான் ஜெயிக்கவில்லை. ஹீரோயினாக நடித்தவரை நான் ஒரு விருது கூட வாங்கவில்லை என் அம்மா நான் அம்மாவாக நடித்த காலத்தில் இல்லை. அவர் இறந்த பிறகு தான் நான் அம்மாவாகவே நடிக்க ஆரம்பித்தேன். அதன்பிறகு நான் 5 ஃபிலிம் ஃபேர் விருதுகள் வாங்கி விட்டேன் தேசிய விருது, மாநில விருது எல்லாமே வாங்கி விட்டேன். அப்போதெல்லாம் எனக்கு என்ன தோன்றும் என்றால் இந்த வேலையில்லா பட்டதாரி அம்மா அம்மா பாடலில் கடற்கரையில் காலடி எடுத்து வைக்கும் போது பக்கத்தில் ஒரு பாதம் வரும் அல்லவா அது எனக்கு ரொம்ப தோன்றும். அந்தப் பாடலின் இரண்டாம் பகுதியைக் கேட்கும் போதெல்லாம் என் அம்மா என்னோடு இருந்ததாகவே எனக்கு தோன்றும். எனக்கு கோயிலுக்கு போய் தேவாலயங்களுக்கு போய் பிரார்த்தனை செய்வது என்று ஒன்று இருந்தாலும் அதிகப்படியான பிரார்த்தனைகள் அம்மாவிடம் தான் இருக்கும் எனக்கு அந்த நம்பிக்கை அதிகமாக இருக்கும். அவர்கள் எப்போதும் என்னை ஆசீர்வதிக்கிறார்கள் என்று இருக்கும்”
என தெரிவித்திருக்கிறார் அந்த முழு பேட்டி இதோ…