மாரடைப்பால் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக் இன்று அதிகாலை காலமானார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் சிகிச்சை பலனிக்காமல் விவேக்கின் உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு திரைத்துறை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நேரில் சென்றும் விவேக்கின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பல பிரபலங்கள் சமூக வலைதளங்களிலும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் பல பிரபலங்கள் பதிவு செய்து வருவதை காண முடிகிறது. நடிகர் சசிகுமார் பதிவிட்டுள்ள ட்வீட்டில், லட்சக்கணக்கான மரங்களை நட்டவர். கலாம் ஐயா வழிநின்று சுற்றுச்சூழலைக் காத்தவர். டெங்கு தொடங்கி கொரோனா வரை மக்களின் விழிப்புணர்வுக்கு பெரும் பங்காற்றியவர். நடிப்பையும் தாண்டி நல்லவராக வல்லவராக இவ்வளவு செய்தவரின் இடத்தை எப்படி ஈடு செய்ய முடியும்? கண்ணீர் அஞ்சலி விவேக் சார்.. என பதிவிட்டுள்ளார்.
நடிகர் கவுதம் கார்த்திக் பதிவிட்டுள்ள ட்வீட்டில், இதை நம்ப முடியவில்லை... அவர் நம்மை சிரிக்க வைத்தார், அவர் தனது நடிப்பின் மூலம் நமக்கு கல்வி கற்பித்தார், இந்த உலகத்தை கவனித்துக்கொண்டார். அதை எவ்வாறு கவனித்துக்கொள்வது என்பதைக் கற்பிக்க உதவினார். உங்களைப் போல இன்னொருவர் இருக்க மாட்டார் சார். நாங்கள் உங்களை மிஸ் பண்ணுவோம்.. ஆன்மா சாந்தியடையட்டும் விவேக் சார்.. இவ்வாறு பதிவிட்டுள்ளார்
நடிகர் விக்ரம் பிரபு பதிவிட்டுள்ள ட்வீட்டில், பல புன்னகைகளுக்கும் சிரிப்பிற்கும் நீங்கள் காரணமாக இருந்தீர்கள். ஒரு சிறந்த நகைச்சுவை நடிகர், அற்புதமான நடிகர் மற்றும் சமூக உணர்வுள்ள குடிமகன். நீங்கள் இனி இல்லை என்று நினைப்பது தாங்க முடியாதது. உங்கள் ரசிகர்களில் ஒருவராக உங்களை மிஸ் பண்ணுவேன் விவேக் சார் என பதிவிட்டுள்ளார்.
தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு பதிவிட்டுள்ள ட்வீட்டில், திரைப்பட தொழில் மற்றும் தமிழ்நாட்டிற்கு ஒரு பெரிய இழப்பு. நீங்கள் எங்களுக்கு வழங்கிய மில்லியன் கணக்கான சிரிப்பினாலும், உங்களால் நடப்பட்ட மரங்களினாலும் நீங்கள் என்றென்றும் நினைவுகூறப்படுவீர்கள் !! அமைதியாக இளைப்பாருங்கள் விவேக் சார் என பதிவிட்டுள்ளார்.
நடிகை நதியா பதிவிட்டுள்ள ட்வீட்டில், மிகவும் வருத்தமளிக்கும் மற்றும் அதிர்ச்சியூட்டும் செய்தி. உங்கள் புத்திசாலித்தனத்தையும் நகைச்சுவையையும் எப்போதும் போற்றுகிறேன். உங்கள் குடும்பத்திற்கு மனமார்ந்த இரங்கல் என பதிவிட்டுள்ளார்.
59 வயதாகும் விவேக் நூற்றுக்கணக்கான படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார். ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்கள் படங்களிலும் நடித்து இருக்கிறார்.
திரைப்படங்களில் சீர்திருத்த கருத்துகளையும் பரப்பினார். இதனால் அவரை சின்ன கலைவாணர் என்று ரசிகர்கள் அழைத்தனர். பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார். சுற்று சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு போன்ற சமூக சேவை பணிகளில் ஆர்வம் காட்டினார். மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாமின் கனவை நிறைவேற்றும் வகையில் கிரீன் கலாம் அமைப்பு மூலம் 1 கோடி மரக்கன்றுகள் நடுவதை இலக்காக வைத்து செயல்பட்டு வந்தார். இதுவரை பள்ளிகள், கல்லூரிகள், கிராமங்கள். சாலையோரங்களில் 33 லட்சத்து 23 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு இருக்கிறார்.
நடிகர் விவேக்கின் இல்லத்தின் முன்பு ஏராளமான பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் குவிந்து அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் விவேக்கின் உடலை பார்த்து கதறிய மூத்த துணை நடிகை ரங்கம்மாவின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நடக்க முடியாத நிலையிலும், வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார் நடிகை ரங்கம்மா.
மறைந்த நடிகர் விவேக்கின் உடல் இன்று மாலை விருகம்பாக்கம் மின் தகன மேடையில் தகனம் செய்யப்படுகிறது என குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். நடிகர் விவேக் உடலை காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரி தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளது. சட்டப்பேரவை தேர்தல் விதிகள் நடைமுறையில் உள்ளதால், தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரியுள்ளது தமிழக அரசு கோரி உள்ளது.