தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால். கடந்த 2008 ம் ஆண்டு பேரரசு இயக்கத்தில் பரத் நடிப்பில் வெளியான ‘பழனி’ திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். அதன் பின் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களில் நடித்து வந்தார். எஸ் எஸ் ராஜமௌலி, ராம் சரண் கூட்டணியில் வெளியான 'மகதீரா' திரைப்படத்தின் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பிரபலமடைந்தார். அதன் பின் தொடர்ந்து தமிழில் முக்கிய திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த காஜல் அகர்வால், அஜித், விஜய், சூர்யா, கார்த்தி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையானார்.
ஒரே நேரத்தில் தமிழிலும் தெலுங்கிலும் உச்சம் பெற்ற காஜல் அகர்வால் சமீபத்தில் தொழிலதிபரை மணந்தார். மேலும் கடந்த ஆண்டு அந்த தம்பதியினருக்கு குழந்தை பிறந்தது. அதனால் இடையே திரைத்துறையில் தொடர்ச்சியாக நடிப்பதற்கு இடைவெளி விட்டிருந்தார். தற்போது காஜல் அகர்வால் மீண்டும் திரைத்துறையில் வேகமெடுக்க தொடங்கியுள்ளார்.
அதன்படி உலகநாயகன் கமல் ஹாசன் – இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் உருவாகும் 'இந்தியன் 2' திரைப்படம் தொடங்கி விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் படப்பிடிப்பில் காஜல் அகர்வால் இணைந்துள்ளார். இப்படத்தில் காஜல் அகர்வால் வயதான தோற்றத்தில் நடிப்பதாக தகவல் முன்னதாக வெளியானது குறிப்பிடத்தக்கது. தற்போது படப்பிடிப்பில் இணைந்துள்ள காஜல் அகர்வால் படத்திற்காக மேக்கப் போடும் உபகரணங்களை தனது சமூக தளங்களில் பதிவிட்டு உள்ளார். இதனையடுத்து காஜல் அகர்வால் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
1996 ல் வெளியாகி மிகப்பெரிய பிளாக் பஸ்டர் அடித்த இந்தியன் திரைப்படத்தை 27 ஆண்டுக்கு பின் அதன் இரண்டாம் பாகத்தை தற்போது எடுத்து வருகின்றனர். சுபாஸ்கரன் சார்பில் லைகா நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் இந்தியன் 2 படத்திற்கான படப்பிடிப்பு தற்போது 80 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் இறுதிகட்டத்தை நோக்கி இந்தியன் 2 படப்பிடிப்பு குழு நகர்ந்துள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் மற்றும் காஜல் அகர்வால் இவர்களுடன் இணைந்து பிரியா பவானி ஷங்கர், சித்தார்த், பாபி சிம்ஹா, விவேக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.