சில தினங்களாக அரபிக் கடலில் மையம் கொண்டிருந்த டவ் தே புயல் குஜராத் மாநிலத்தில் கரையை கடந்தது. இதனால் குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் கடலோர மற்றும் முக்கியமான நகரங்களில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது.
மிகுந்த கடல் சீற்றத்துடன் புயல் கரையை கடந்த போது ஏற்பட்ட கனமழையால் குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் அனேக மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மும்பை உள்ளிட்ட மகாராஷ்ட்ராவின் பல நகரங்களில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பொழிந்தது. சூறைக்காற்றால் பல மரங்கள் வேரோடு சரிந்து விழுந்தன.
இந்நிலையில் இந்தியில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்த பிரபல நடிகையான தீபிகா சிங், வேரோடு சாய்ந்த மரங்களுக்கு நடுவில் புகைப்படங்கள் எடுத்தும் கொட்டும் மழையில் சாய்ந்த மரங்களுக்கு இடையில் நடனமாடியும் அவற்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அந்தப் பதிவில் "புயலை நாம் தடுத்து நிறுத்த முடியாது அதுவாகவே கடந்து போகும்" என்று அந்தப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே கொரோனா வைரஸ் தாக்கத்தில் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டவர்கள் மாநிலமாக முதலிடத்தில் மகாராஷ்டிரா இருக்கிறது. இந்தப் பேரிடர் காலத்தில் ஏற்பட்டுள்ள இந்த இயற்கை சீற்றம் மகாராஷ்டிரா மக்களை மிகவும் அவதிக்குள்ளாக்கியது. இதற்கிடையே நடிகை தீபிகா சிங்கின் இந்தப்பதிவு மகாராஷ்டிரா வாழ் மக்களை எரிச்சலூட்டும் விதமாக அமைந்துள்ளது. இதனால் பலரும் தீபிகா சிங்கின் இந்த பதிவிற்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.