நடிகை அமலா பால் தனது காதலர் ஜெகத் தேசாய் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கேரள மாநிலத்தில் உள்ள கொச்சியில் நடைபெற்றுள்ளது. சமீப காலமாக ஜகத் தேசாய் எனும் தொழிலதிபரை நடிகை அமலா பால் காதலித்து வந்த விஷயம் அனைவரும் அறிந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை அமலா பாலின் பிறந்த நாளில் நடனமாடி மோதிரம் அணிவித்து தனது காதலை வெளிப்படுத்திய ஜகத் தேசாய் தன்னை திருமணம் செய்து கொள்ள விருப்பமா என்பதை கேட்க தனது விருப்பத்தை அப்போதே அமலாபால் தெரிவித்தார். அதனை தொடர்ந்து விரைவில் இவர்களுக்கு திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது நெருங்கிய வட்டாரத்தோடு அமலா பால் - ஜகத் தேசாய் திருமணம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றுள்ளது.

தென்னிந்திய சினிமாவின் மிக முக்கிய கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை அமலா பால். கடந்த 2009 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த நீலதாமரா திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நடிகையாக களமிறங்கிய அமலாபால் தமிழில் நடித்த மைனா திரைப்படத்திற்கு பிறகு மிகுந்த பிரபலமடைந்தார். தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அடுத்தடுத்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த அமலா பால் சீயான் விக்ரமின் தெய்வத்திருமகள், சித்தார்த்தின் காதலில் சொதப்புவது எப்படி, ஆர்யாவின் வேட்டை, தளபதி விஜயின் தலைவா, ஜெயம் ரவியின் நிமிர்ந்து நில், தனுஷின் வேலையில்லா பட்டதாரி & வேலையில்லா பட்டதாரி 2, திருட்டுப் பயலே 2, ராட்சசன், ஆடை உள்ளிட்ட திரைப்படங்களில் கதையின் நாயகியாகவும் முன்னணி கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார். அடுத்ததாக பிரித்விராஜ் நடிப்பில் பிரம்மாண்ட படைப்பாக வெளிவர இருக்கும் ஆடு ஜீவிதம் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை அமலா பால் அடுத்தடுத்து மலையாளத்தில் இரண்டு புதிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். முன்னதாக கடந்த 2014 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் AL.விஜயை திருமணம் செய்து கொண்டு 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்ற நடிகை அமலா பால் தற்போது ஜகத் தேசாயை மறுமணம் செய்து இருக்கிறார்.

இந்த அழகிய திருமணத்தின் புகைப்படங்களை நடிகை அமலாபால் மற்றும் ஜகத் தேசாய் இருவரும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளனர். அந்த வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண புகைப்படங்களை பதிவிட்டு இருக்கும் நடிகை அமலாபால், "எங்களை ஒன்றிணைத்த அன்பையும் அருளையும் கொண்டாடுகிறோம்... என் தெய்வீக ஆண்மையுடன் திருமணம் செய்து கொண்டேன்... உங்கள் அன்பையும் ஆசீர்வாதத்தையும் வேண்டுகிறேன்." என்று பதிவிட்டுள்ளார் அதேபோல் ஜகத் தேசாய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து, "இரண்டு ஆன்மாக்கள், ஒரு விதி, என் தெய்வீக பெண்ணுடன் இந்த வாழ்நாள் முழுவதும் கைகோர்த்து நடப்பேன்.." என பதிவிட்டு இருக்கிறார். லாவண்டர் நிற திருமண உடையில் அட்டகாசமாக காட்சியளிக்கும் அமலா பால் மற்றும் ஜெகத் தேசாயின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன அந்த புகைப்படங்களை கீழே உள்ள லிங்கில் காணலாம்.

View this post on Instagram

A post shared by Jagat Desai (@j_desaii)