தமிழ் நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் 70 ஆண்டுகால வரலாற்று நிகழ்வினை தொகுத்து வரும் தலைமுறையினருக்கு எடுத்து செல்லும் நோக்கில் மிகப்பிரமாண்டமான புகைப்படக் கண்காட்சி சமீபத்தில் சென்னையில் தொடங்கப்பட்டது. சென்னையை தொடர்ந்து இன்னும் பல மாவட்டங்களில் இந்த புகைப்பட கண்காட்சி மக்களுக்கு காட்சிப்படுத்தவுள்ளது இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகிறது. அதன்படி மதுரையில் இன்று எங்கள் முதல்வர் எங்கள் பெருமை புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டது.
இந்த புகைப்படக் கண்காட்சியினை தமிழ் திரையுலகின் நகைச்சுவை நடிகர் ஜாம்பவான் வைகைப்புயல் வடிவேலு அவர்கள் தொடங்கி வைத்தார். பின் புகைப்பட கண்காட்சியினை கண்டுகளித்தார். பின் பத்திரிக்கையாளரை சந்தித்த வடிவேலு
“மிகப்பெரிய பிரம்மிப்பா இருக்கு.. மதுரையில் தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு ஐயா ஸ்டாலின் அவர்களுடைய 70 ஆண்டு வரலாறு புகைப்பட கண்காட்சியினை இங்க திறக்க அழைத்தார்கள். இது கேட்டு அதிர்ச்சியில் ஷாக் ஆயிட்டேன். இவ்வளவு பெரிய இடத்தை எனக்கு கொடுத்திருக்காங்க னு.. அதுவும் எனக்கு பெருமையாகவுப் இருந்தது. இது உண்மையிலே சாதரணமான விஷயம் இல்ல. இது எல்லாம் வெறும் புகைப்படங்கள் இல்லை. இது நிஜம்.. படிப்படியாக அவர் வாழ்ந்த வாழ்க்கையை வரலாற்று புகைப்படங்களாக இங்க வெச்சிருக்காங்க..அதை பார்க்கும் போது நெஞ்சமெல்லாம் நெகிழ்கிறது.
ஒரு மனுஷன் சும்மா திட்டுனா கூட தாங்க மாட்டார்கள். அதை விட பல விஷயங்களை தாங்கி ஒரு மனுஷன் இந்தளவு உயர்ந்து வந்திருக்காரு.. போராட்ட நோக்கத்தோடு ஒரு போராளியாக ஜெயிச்சுருக்காரு.. மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கு இதை விட சிறந்த உதாரணம் தேவையில்லை.. தன்னம்பிக்கையும் தைரியமும் உழைப்பும் தான் அவரை தமிழ்நாடு முதலமைச்சராக கொண்டு வந்துருக்கு.. இத சொல்ல எனக்கு பெருமையா இருக்கு. மிசா நேர கதையை நான் கேட்டிருக்கேன். ஆனா அதை புகைப்படமாக பார்க்கும் போது வரலாறு கதை சொல்கிறது. மிகப்பெரிய அற்புதமான இந்த கண்காட்சியினை நாட்டில் இருக்கும் எல்லோரும் வந்து பார்க்க வேண்டும். இது எல்லோருக்கும் தன்னம்பிக்கை, தைரியத்தை கொடுக்க கூடும்” என்றார்.
மேலும் "சிறைச்சாலையில் முதல்வர் இருப்பது போன்ற புகைப்படம் இருக்கிறது. அது சம்பந்தமான புத்தகமும் கூட இருக்கிறது. இதனை என் அருமை சகோதரர் உதயநிதி ஸ்டாலின் படமாக எடுக்க இருந்தார். அப்படத்திற்கு கமல்ஹாசன் டைரக்ஷன் செய்வதாக இருந்தது. ‘மிசா’ என்று பெயர் வைக்கப்பட்டு அந்தப்படம் எடுக்கப்படுவதாக இருந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் ‘மாமன்னன்’ படத்தோடு சினிமாவில் நடிப்பதை முடித்துக்கொள்வதாக அறிவித்து விட்டார். தற்போது அந்த படம் உருவாகுமா என்று தெரியவில்லை. நாங்கள் வற்புறுத்தி அந்த படத்தை எடுக்க கேட்கவுள்ளோம்” என்றார் வைகைப்புயல் வடிவேலு.