தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கி முன்னணி நடிகராய் வலம் வருபவர் நடிகர் சித்தார்த். தமிழில் பல ஹிட் திரைப்படங்களில் நடித்த இவர் சமீப காலமாக தமிழ் திரையுலகில் சில காரணங்களினால் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார். தற்போது மீண்டும் தமிழ் திரையுலகில் பல படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். அதன்படி டெஸ்ட், சித்தா மற்றும் உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 போன்ற படங்களில் சித்தார்த் தற்போது மும்முரமாக நடித்து வருகிறார்.
இதனிடையே இயக்குனர் ஷங்கர் உதவி இயக்குனராக இருந்து ‘கப்பல்’ திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் கார்த்திக் ஜி கிரிஷ்.இவர் இயக்கத்தில் தற்போது வெளியாகவிருக்கும் ‘டக்கர்’ திரைப்படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக சித்தார்த் நடித்துள்ளார்.
காதல் கமர்ஷியல் மசாலாக்களுடன் உருவான டக்கர் திரைப்படத்தின் முன்னோட்டம் முன்னதாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் தனி எதிர்பார்ப்பை உருவாக்கியது. அதன்படி வரும் ஜூன் 9 ம் தேதி சித்தார்த்தின் டக்கர் திரைப்படம் வெளியாகவுள்ளதை ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் டக்கர் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது இந்த நிகழ்வில் சித்தார்த் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இதில் டக்கர் திரைப்படம் குறித்து பேசிய சித்தார்த், "இந்த டக்கர் திரைப்படம் விறுவிறுப்பாக எந்த இடத்திலும் நிக்காத ஸ்பீடான படம். டக்கர் ன்ற டைட்டில் வட இந்தியாவில் போட்டி என்று ஒரு அர்த்தம் உள்ளது. சில ஊர்களில் ஸ்மார்ட், மோதல், சூப்பர் என்று பார்டர் தாண்ட தாண்ட மாறிக் கொண்டே இருக்கும்.. இந்த படத்தை பொறுத்தவரை மோதல் தான் முதல் காரணம். சினிமாவில் பயன்படுத்தப்பட்ட ஹீரோயின் கதாபாத்திரங்களை விட இந்த படத்தில் தனித்துவமாகவும் வித்தியாசமாகவும் இருக்கும் நிச்சயம் ஹீரோயின் கதாபாத்திரம் பேசப்படும். ஹீரோவிற்கும் ஹீரோயினுக்கும் இடையேயான மோதலை பேசும் படமாக டக்கர் திரைப்படம் உருவாகியுள்ளது. குஷி படம் போல காதலர்களுக்குள் வரும் ஈகோ பிரச்சனையா என்று கேட்டால் இல்லை..
டக்கர் ஒரு பக்கா கமர்ஷியல் திரைப்படம் நான் இதுவரைக்கும் அது போன்ற படங்கள் பண்ணல.. சமையல்- ல எப்படி எல்லாமோ இருக்குமோ. அதே மாதிரி இந்த படத்திலும் இருக்கும்.. படத்திற்கு நிறைய ஸ்டண்ட் முயற்சி செய்திருக்கோம். அதற்காக நிறைய அடி விழுந்துச்சு.. நல்ல பண்ணாலும் அடி விழும், அடி பட்டிருக்கேன்.. ஆனா படம் முடிச்சு அதை பாக்கும் போது எனக்கே தனி ஆர்வம் படத்தின் மீது வந்து விட்டது.. ஜூன் 9 ம் தேதி சித்தார்த் காட்டுல மழை.. சித்தார்த்திற்கு கண்டிப்பா ஒரு ஹிட் இருக்கும். பொதுவாகவே நான் புதுமுக இயக்குனருடன் பயணம் செய்திருக்கிறேன்.. ஆனால் அவங்களோட அடுத்த படங்கள் பண்ண முடியல இந்த படத்துல கார்த்திக் ஓண அடுத்த இரண்டு படம் பண்ணலாம்னு இருக்கேன். என்னோட திரைப்பயணத்தில் என்னை புதுசா காட்டுனா படம் இது.. இது ஓடிடி டிவி ல பார்த்துக்கலாம்னு நினைக்குற படம் கிடையாது.. கண்டிப்பா திரையரங்குகில் ரசிகர்களுடன் பார்க்க கூடிய திரைப்படம்.” என்று குறிப்பிட்டு பேசினார் நடிகர் சித்தார்த். தற்போது பத்திரிக்கையாளர் சந்திப்பில் சித்தார்த் பேசியவை ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.