நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகிறது. முயற்சிகள் ஒருபுறம் இருக்க, வைரஸின் தாக்கம் வேகமாக இருக்கிறது. இந்த தொற்று காரணமாக உயிரிழப்போர் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வருகிறது. தினசரி செய்தி சேனல்களை ஆன் செய்தால் கொரோனா பற்றிய செய்திகள் தான் அதிகம். இது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் என யாரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. அனைத்து தரப்பினரும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சில தினங்களுக்கு முன் பிரபல நடிகர் அமிதாப்பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆராத்யா ஆகியோர் இந்த நோய்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஓரிரு நாளில் அமிதாப்பச்சனும் அபிஷேக் பச்சனும் வீடு திரும்புவார்கள் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து மும்பையை சேர்ந்த பிரபல ஹிந்தி நடிகர் பிரதிக் காந்தி மற்றும் அவரது மனைவியான நடிகை பாமினி ஓஷா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரதிக்கின் சகோதரர் புனித்துக்கும் கொரோனா தொற்று இருப்பதாக செய்திகள் வெளியானது.
இதுகுறித்து நடிகர் பிரதிக் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனா பாகுபாடு இல்லாமல் எங்கள் குடும்பத்தில் அனைவரையும் பாதித்துள்ளது. நானும், எனது மனைவியும் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகிறோம். எனது சகோதரர் புனித் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்று குறிப்பிட்டிருந்தார்.
2006-ம் ஆண்டு தனது திரைப்பயணத்தை துவங்கிய பிரதிக், மிட்ரான், லவ்யாத்ரி உள்பட சில படங்களில் நடித்துள்ளார். பே யார், ராங் சைட் ராஜூ, லவ் நி பவாய் என்ற குஜராத்தி படங்களிலும் நடித்துள்ளார். லாக்டவுன் துவங்கியதிலிருந்தே திரைப்பிரபலங்கள் தொடர்பான அதிர்ச்சி செய்திகள் வெளியாவதை பார்க்க முடிகிறது. இதனால் திரை விரும்பிகள் மற்றும் திரைப்பட கலைஞர்கள் அவதியில் உள்ளனர்.