உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் தயாரிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தில் மாஸ்டர் மற்றும் கைதி ஆகிய திரைப்படங்களில் முக்கிய படங்களில் நடித்த பிரபல நடிகர் இணைந்திருக்கிறார். முன்னதாக யோகி பாபு நடிப்பில் வெளிவந்து ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்த, மண்டேலா திரைப்படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க, இயக்குனர் மிஷ்கின் வில்லனாக நடிக்க, தயாராகி இருக்கும் மாவீரன் திரைப்படம் வருகிற ஜூலை 14ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

தொடர்ந்து இன்று நேற்று நாளை திரைப்படத்தின் இயக்குனர் R.ரவிசங்கர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏலியன் சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படமாக தயாராகி இருக்கும் அயலான் திரைப்படத்தின் இறுதிக்கட்ட VFX பணிகள் தற்போது மும்மரமாக நடைபெற்று வருகின்றன. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் அயலான் திரைப்படம் இந்த 2023 ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக ரிலீஸாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதனையடுத்து முதல் முறையாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக தெரிகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே உலகநாயகன் கமல் ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகும் SK21 திரைப்படத்தில் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து இருக்கிறார். இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து சாய்பல்லவி கதாநாயகியாக நடிக்கும் SK21 திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, SK21 திரைப்படம் பூஜை உடன் தொடங்கப்பட்டது. கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் 51-வது திரைப்படமாக உருவாகும் இந்த புதிய திரைப்படத்தின் அறிவிப்பு வெளிவந்த சமயத்தில் இருந்தே மிகப் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது.

இது குறித்த இதர அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கும் நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்து மெகா ஹிட்டான கைதி மற்றும் மாஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்த நடிகர் லல்லு சிவகார்த்திகேயனின் SK21 படத்தில் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. முன்னதாக இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி தனது முதல் படமாக இயக்கிய ரங்கூன் திரைப்படத்தில் நடிகர் கௌதம் கார்த்திக் உடன் இணைந்து முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் லல்லு தற்போது ஏழு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியின் இரண்டாவது படத்திலும் இணைந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “ரங்கூன் படம் வந்து ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டது அந்த படத்தில் ஒரு பகுதியாக இருந்ததற்கு என்றும் நன்றி கடன் பட்டிருக்கிறேன். அடுத்த SK21 படத்தில் மீண்டும் இணைவதால் மிகுந்த ஆவலோடு இருக்கிறேன். நீங்கள் தான் என்னுடைய ஆதரவு & என்னுடைய குரு… என்றும் உங்களுக்காக நன்றியுள்ளவன் நான்." என குறிப்பிட்டு பதிவிட்டு இருக்கிறார். நடிகர் லல்லுவின் அந்த ட்விட்டர் பதிவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.