தமிழ் திரையுலகில் அசைக்க முடியாத சாம்ராஜ்யத்தை உருவாக்கி வைத்திருக்கும் தயாரிப்பு நிறுவனம் என்ற புகழை அடைந்திருக்கும் நிறுவனம் லைகா. தயாரிப்பாளர் சுபாஸ்கரன் அவர்களின் தயாரிப்பில் முதல் முதலில் லைகா நிறுவனம் தமிழ் சினிமாவில் தளபதி விஜயின் கத்தி திரைப்படம் மூலம் அடியெடுத்து வைத்தது. முதல் படத்திலே பிளாக் பஸ்டர் ஹிட். அதன்பின் தொடர்ந்து வெற்றிப்படங்களாக லைகா நிறுவனத்திற்கு அமைந்தது. ‘எந்திரன் 2.0’, ‘தர்பார்’, ‘டான்’ போன்ற படங்கள் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய இடம் பிடித்தது. குறிப்பாக கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகளவில் மிகப்பெரிய வசூல் வேட்டையாடியது.

இந்த ஆண்டு பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியிட திட்டமிட்டுள்ளனர். மேலும் இந்த திரைப்படமும் மிகப்பெரிய வசூல் சாதனையை செய்யும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. மேலும் உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் இந்தியன் 2 திரைப்படத்தையும் அஜித் குமாரின் அடுத்த திரைப்படமான ‘AK 62’ மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெய் பீம் இயக்குனர் தசெஞானவேல் இணையும் புது படத்தையும் லைகா நிறுவனம் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஒரு புறம் பெரிய பெரிய படங்களை தேர்ந்தெடுத்து தயாரித்து வந்தாலும் அதே நேரத்தில் சிறிய பட்ஜெட் படங்கள் சிறியஅளவு நட்சத்திரங்களின் படங்களையும் தயாரித்து வருகிறது.

அதன்படி தற்போது லைகா நிருவனம் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், சிவதா ஆகியோர் நடிக்கும் ‘தீராக் காதல்’ என்ற படத்தையும் தயாரித்து வருகிறது. இப்படத்தினை அதே கண்கள், பெட்ரோமாக்ஸ்ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ரோஹின் வேங்கடாசலம் இயக்குகிறார். ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் நீலமேகம் ஒளிப்பதிவு செய்ய பிரசன்னா ஜிகே படத்தொகுப்பு செய்கிறார். இப்படத்திற்கு சித்து குமார் இசையமைக்கவுள்ளார். மூன்று காதலை உணர்த்தும் விதமாக வெளியான அட்டகாசமான போஸ்டர் தற்போது இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

நடிகர் ஜெய் நீண்ட காலமாக தமிழில் மிகபெரிய ஹிட் கொடுப்பதற்காக காத்திருக்கிறார். கடந்த ஆண்டு அவர் நடிப்பில் வீரபாண்டியபுரம், குற்றம் குற்றமே, பட்டாம்பூச்சி, எண்ணி துணிக மற்றும் காபி வித் காதல் ஆகிய படங்கள் வெளியாகியது. ஐந்து படங்களிலும் வித்யாசமாக தன் நடிப்பினை வெளிபடுத்தினாலும் பெருமளவு வரவேற்பு படங்களில் கிடைக்கவில்லை. இருந்தாலும் நடிகர் ஜெய் அவர்களை விரும்பும் ரசிகர் கூட்டம் அவரது வெற்றிக்கு காத்து கொண்டிருக்கின்றனர். லைகாவின்வெற்றி பயணத்தில் நடிகர் ஜெய் அவர்களுக்கு வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.