பொல்லாதவன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக களமிறங்கி ஆடுகளம் திரைப்படத்தில் இரண்டு தேசிய விருதுகளை கைப்பற்றிய இயக்குனர் வெற்றிமாறன், தொடர்ந்து விசாரணை மற்றும் அசுரன் ஆகிய திரைப்படங்களுக்கும் தேசிய விருதுகளை வென்றார். இந்த வரிசையில் அடுத்ததாக விடுதலை திரைப்படத்திற்கும் இயக்குனர் வெற்றிமாறனுக்கு தேசிய விருது கிடைப்பது உறுதி என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் இதுவரை பார்த்திராத புது அனுபவத்தில் மிரட்டலான படைப்பாக விடுதலை படத்தை ரசிகர்களுக்காக வழங்கி இருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன். எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் துணைவன் சிறுகதையை தழுவி ஆர் எஸ் இன்ஃபோடைன்மென்ட் மற்றும் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் இரண்டு பாகங்களாக விடுதலை திரைப்படத்தை இயக்குனர் வெற்றிமாறன் உருவாக்கி இருக்கிறார்.

முதல்முறையாக இயக்குனர் வெற்றிமாறன் உடன் கைகோர்த்த நடிகர் சூரி தனது வழக்கமான கதாபாத்திரங்களில் இருந்து முழுவதும் மாறுபட்டு குமரேசன் எனும் கதாபாத்திரத்தில் கதையின் நாயகனாக நடிக்க, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பெருமாள் வாத்தியார் எனும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பவானி ஸ்ரீ இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தமிழ் சேத்தன் உள்ளிட்ட இணைந்து நடித்துள்ளனர். R.வேல்ராஜ் ஒளிப்பதிவில், R.ராமர் படத்தொகுப்பு செய்ய, பீட்டர் ஹெய்ன் மற்றும் ஸ்டண் சிவா ஸ்டண்ட் இயக்குனர்களாக பணியாற்றியுள்ள விடுதலை திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார். ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட கடந்த மார்ச் 31-ம் தேதி திரையரங்குகளில் விடுதலை பாகம் 1 திரைப்படம் ரிலீஸானது.

இந்த நிலையில் நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்தியேக பேட்டிகள் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்ட நடிகர் சேத்தன் அவர்களிடம், "விடுதலை திரைப்படத்தில் காவல்துறையினரின் அடக்குமுறை பிரதிபலிக்கும் சில காட்சிகள் விசாரணை படத்தை நினைவுபடுத்துவதாகவும் அதன் சாயல் இருப்பதாகவும் பேசப்படுகிறது, அதில் இருக்கக்கூடிய கதாபாத்திரங்களின் இரக்கமற்ற தன்மையை இந்தப் படத்திற்காக குறிப்புகளாக எடுத்துக் கொண்டீர்களா?” என கேட்டபோது, “இல்லையே எனக்கு இதில் விசாரணை படத்தின் எந்த ஒரு சாயலும் தெரியவில்லை.. ஏனென்றால் விசாரணையில் இந்த ஊரில் இருந்து ஆந்திராவுக்கு சென்று வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒரு 4-5 பேர் அங்கிருக்கும் காவல்துறையினரிடம் மாட்டிக் கொண்டு தவிக்கும் போராட்டங்களையும் சித்திரவதைகளையும் பேசியது. ஆனால் விடுதலை படத்தில் காவலருக்கே இங்கு சித்திரவதை தான். புதிதாக சேர்ந்த ஒரு காவலருக்கு அந்த காவல்துறையின் அமைப்பில் அவனை எப்படி எல்லாம் கேவலப்படுத்துகிறார்கள். அதன் சாப்பாட்டு முறைகள் என்னென்ன இரண்டு இட்லி வைத்தால் போதும் என்கிறார்கள். இந்த விஷயங்கள் எல்லாம் காவலருக்கே பெரும் சித்திரவதை தான் அவர்களுடைய வாழ்க்கை முறை போலீஸில் ஒரு கம்பெனி என்பது எப்படி நடைபெறுகிறது என்பதையெல்லாம் விடுதலை படத்தில் பேசப்பட்டு இருக்கிறது. எனவே விசாரணைக்கும் விடுதலை திரைப்படத்திற்கும் ஒரே சாயல் இருப்பதாக என்னால் உணர முடியவில்லை.” என விளக்கம் அளித்துள்ளார். இன்னும் பல சுவாரசியங்கள் பகிர்ந்த சேத்தனின் அந்த முழு பேட்டி இதோ…