கொரோனா...லாக்டவுன்...வாக்சின் !!! இந்த இரண்டு ஆண்டுகளில் நம் மனதில் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும், ஒலித்துக்கொண்டிருக்கும் விஷயம் இதுதான். செய்தித்தாள்கள், செய்தி சேனல்கள் என எதை பார்த்தாலும், அச்சம் தரக்கூடிய செய்திகள் வரிசை கட்டி வருகின்றன. அதை திசை திருப்பவும், சினிமா பிரியர்களுக்கு பயனுள்ள செய்திகளை எடுத்துக்கூறவும் கலாட்டா மேற்கொண்ட சிறு முயற்சி.
லாக்டவுனில் ஒவ்வொரு திரைப்பிரபலங்களுக்கும் போன் செய்து, அவர்களின் திரைப்பயணத்தை கேட்டறிவது வழக்கம். அந்த வகையில் நடிகர், காமெடியன், இயக்குனர் என தொட்டதெல்லாம் தூள் கிளப்பும் திரைவாசி ஸ்ரீநாத் அவர்களை தொடர்பு கொண்டோம். சும்மா சொல்லக்கூடாதுங்க மனுஷன் ஃபுல் ஃபார்ம்ல பதில் சொல்லி பட்டைய கிளப்பினாரு.
இதோ உங்களுக்காக...
Black & White படம் மட்டும் தான் நீங்க நடிக்கல, மத்தபடி பிலிம் ரீல் துவங்கி ஓடிடி வரைக்கும் சினிமாவோட பரிமாணத்தை பாத்துட்டீங்க. இந்த அனுபவம் பத்தி சொல்லுங்க...
ஃபென்டாஸ்டிக்கா இருக்கு...சினிமா சம்மந்தமா படிச்சிட்டு, அசிஸ்டன்ட் டைரக்டரா இருக்கும்போது Educated-ஆ போய்ட்டு, யாருகிட்டயாவது Practical எக்ஸ்பீரியன்ஸ் கெயின் பண்ணிட்டு டைரக்டர் ஆகலாம்னு நினைச்சேன். 1992-ல நாளைய தீர்ப்பு படத்துல டைரக்டர் SAC சார் சொன்னதால friend ரோல்ல நடிச்சேன். அது ஒரு ஆக்ஸிடன்ட். அதுல இருந்து டைரக்டர் கதிர் சார் கிட்ட அசிஸ்டன்ட்டா சேர்ந்து. அப்பறோம் ஜீவா சார் என்ன முழு நேர நடிகனா மாத்திவிட்டு...இப்போ வரைக்கும் நடிச்சிட்டு இருக்கேன். எதையும் பிளான் பண்ணி பண்ணல..அதுவா ஒரு Flow-ல போகுது.
இப்பவும் காலேஜ் ஸ்டுடென்ட் மாதிரி தான் இருக்கீங்க...காலேஜ் டேஸ் பத்தி சொல்லுங்க...
காலேஜ்குள்ள என்டர் ஆனது 1992 VisCom பேட்ச்...அங்க தான் விஜய்யோட ஃபிரண்ட்ஷிப் கிடைச்சுது. ஸ்பெஷலா மிஸ் அவுட் பண்ணவங்களுக்காக Aptitude டெஸ்ட் ஒன்னு வச்சாங்க. 10 பேரு கிட்ட எழுதுனோம். அதுல என் பக்கத்துல உட்காந்து எழுதுனவரு விஜய்...நம்ம தளபதி விஜய். அவரோட ஃபிரண்ட்ஷிப் கிடைச்சதால அவரோட வீட்டுக்கு போறது வரதுனு இருக்கப்போ SAC சார் சொல்லி, நாளைய தீர்ப்பு படத்துல விஜய்யோட friend-ஆ நடிச்சேன்.
நாளைய தீர்ப்பு படத்துல நடிக்கிறப்போ, நம்ம Friend-ஓட அப்பா டைரக்ட் பண்ற படம்னு கம்ஃபர்ட் ஸோன் இருந்துச்சா ? ஒரு பெரிய டைரக்ட்டரோட படத்துல நடிக்கப்போறோம்ற பயம் இருந்துச்சா ?
சின்ன பயம் இருந்துச்சு.. அதுவரைக்கும் கேமராவுல ஸ்டில்க்கு மட்டும் போஸ் கொடுத்திருக்கோம். நான் போட்டோஷூட் கூட பண்ணதில்ல. சில பேரெல்லாம் ஆல்பம் வச்சிருப்பாங்க..என்கிட்ட அப்போ ஆல்பம் கூட கிடையாது. நடிகன்ற மைண்ட்செட்டே அப்போ இல்ல. நாளைய தீர்ப்பு படத்தப்போ, SAC அங்கிள்னு ஒரு கம்ஃபர்ட்ல தான் இருந்தேன். செட்ல மட்டும் சார்னு தான் கூப்பிடுவேன். அங்கிள்னு கூப்பிட எனக்கே ஒரு மாதிரியா இருந்துச்சு. மொத்த செட்டும் சார்னு கூப்பிடறப்போ,, எனக்கு அந்த individual privilege இல்லனு வச்சுக்கோங்களேன். மத்தபடி முதல் படம் மாதிரி இல்லாம, பிக்னிக் மாதிரி இருந்துச்சு...
இயக்குனர் ஸ்ரீநாத் பத்தி பேசுவோம்...முதல் படம் முத்திரை, அதுல கொஞ்சம் கலவையான விமர்சனம் வருது !! அதுக்கு பிறகு வந்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்துல சிக்ஸர் அடிக்க முடியுது.. அந்த கம்-பேக் பத்தி சொல்லுங்க...
முத்திரைக்கு முன்னாடி 4,5 படம் என் கைல இருக்கு...நான் நடிச்சிட்டு இருக்கேன். நானா போய்டு கதைய சொல்லி, ப்ரோடக்ஷன் கம்பெனியா ஏறி, நடிகரோட கால்-ஷீட்ட வாங்கி, வியாபார ரீதியா கதைய அமைச்சு பண்ண படம் கிடையாது. நிறைய பேருக்கு நான் ஒரு முக்கியமான விஷயத்த சொல்லணும்... நான் நடிகனா பிஸியா இருந்தபோது வரப்பட்ட ஒரு கிஃப்ட். எனக்கு அதுவே தேடி வந்துச்சு, எப்படினா...என்ன அறிமுகப்படுத்துனது SAC சார் தான், என்ன முழு நேர நடிகனா மாத்துனது ஜீவா சார்..என் குருநாதர். ஜீவா சாரோட மனைவி, விஷன் ஜீவா ஸ்டுடியோஸ்னு செட் பண்ணாங்க. ஜீவா சாரோட 4 அசிஸ்டன்ல, நான் தான் Blue Eyed Boy. ஜீவா சார் எப்போமே சொல்லிட்டு இருப்பாரு, நான் ஒரு ப்ரோடக்ஷன் கம்பெனி ஆரம்பிப்பேன். அதுல நீங்க தான் முதல்ல டைரக்ட் பண்ணனும்னு..ஹீரோவா கூட ஒரு ஸ்கிரிப்ட் யோசனை வச்சிருந்தாராம். அந்த கனவை நிறைவேத்தனும்னு ஜீவா சாரோட மனைவி முயற்சில இறங்குனாங்க. அவங்களோட ஸ்டோரி, ஸ்கிரீன் பிலேவ என்ன டைரக்ட் பண்ண சொன்னாங்க.. அப்படி வந்த வாய்ப்பு தான் முத்திரை.
ஸ்ரீநாத்-னாவே காமெடி...இவர் படங்களும் காமெடி படமாவே பண்ணுவார்னு-ற கேள்விகள், கமெண்டுகள் வந்திருக்கா ?
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பலம், ஸ்டைல் இருக்கும். படைப்பா வெளில வரவரைக்கும் சொல்லவே முடியாது. உதாரணத்துக்கு லிங்குசாமி சார எடுத்துக்கலாம், ஆனந்தம் மாதிரி ஒரு படம் பண்ணிட்டு, ரன் மாதிரி கமெர்ஷியலா பன்றாரு..அதே மாதிரி மணிரத்னம் சார் எடுத்துக்கலாம், என்ன ஜானர் டச் பண்ண போறாருனே சொல்ல முடியாது. அஞ்சலி மாதிரி ஒரு படம் பண்ணுவாரு, திடீருனு சூப்பர்ஸ்டார் வச்சு தளபதி மாதிரி ஒரு படம் பண்ணுவாரு. என்ன அப்படினா ஒரு கிரியேட்டர் இததான் பண்ணுவாங்கனு அடக்கவே முடியாது. என்கிட்ட இருந்து ஒரு ஹார்ட் கோர் ஆக்ஷன் படம் யாரும் எதிர்பார்க்க மாட்டாங்க. என்னோட அடுத்த படம் கூட ஒரு நல்ல காமெடி படத்துக்கான கதை தான். அவங்க அவங்க பலம் தெரிஞ்சு ஒர்க் பண்ணா பேலன்ஸ் ஆகும்னு நினைக்கிறன். அதான் நம்ம பயணமும் கூட !!!
இயக்குனர் ஜீவா ஒரு நல்ல சினிமாட்டோகிராஃபரும் கூட...அவர் கூட பயணிச்சப்போ டைரக்ஷன் டிபார்ட்மென்ட் தாண்டி ஒளிப்பதிவு சைடும் கவனம் செலுத்துனீங்களா ?
உங்க கிட்ட அசிஸ்டன்ட்டா ஒர்க் பண்ணனும்னு ஜீவா சார் கிட்ட சொன்னேன். அதுக்கு அவர் கதிர், A. வெங்கடேஷ் மாதிரி இயக்குனர்கள் கிட்ட ஒர்க் பண்ணிட்டு, என்கிட்ட ஏன் ? அப்டினு கேட்டாரு. நாளபின்ன நான் ஒரு டைரக்டரா ஆனா, சினிமாட்டோகிராஃபி விஷயமா லைட்டிங், லென்ஸ், கலர் டோன், ஆங்கிள்-ளாம் தெரிஞ்சிக்க உபயோகமா இருக்கும்னு சொன்ன அந்த பதில் அவருக்கு புடிச்சுது. ஆனா என்னால முழுசா கத்துக்க முடியல. டைரக்ஷன் டிபார்ட்மென்ட்ல இருக்கப்போ அதுவே சரியா இருக்கும். 12 மணி நேரமா இருந்தாலும், போதாத மாதிரி இருக்கும். குறிப்பா ஜீவா சார் கூட ஒர்க் பண்றப்போ, எல்லாமே பெர்ஃபெக்ட்டா இருக்கனும்னு பாப்பாரு. என்னால கத்துக்குட்டி அளவுக்கு தான் சினிமாட்டோகிராஃபி கத்துக்க முடிஞ்சுது. இந்த லாக்டவுன்ல தான் சினிமாட்டோகிராஃபர்ஸோட இன்டெர்வியூ பாக்குறது, புக்ஸ் படிக்கிறதுனு இருக்கேன்.
கடந்த ரெண்டு லாக்டவுன்ல நிறைய இயக்குனர்கள் புதுசு புதுசா ஸ்கிரிப்ட் ரெடி பண்றதா சொல்றாங்க...உங்களுக்கு இந்த லாக்டவுன் எப்படி இருக்கு ? எந்த மாதிரியான ஸ்கிரிப்ட் எதிர்பார்க்கலாம் ?
கட..கடனு சமையல் பண்றா மாதிரி, தோசை சுடுறா மாதிரி ரெடி பண்ணிட முடியாது. இது ஒரு கிரியேடிவ் ப்ராசஸ். ஒரு சீன் கிடைக்குறதுக்கு ஒரு வாரம் ஆகும். சில நாள்ல ஒரு மணி நேரத்துல கிடைச்சிடும். இதுக்கு ஒரு அளவுகோல் கிடையாது. போன லாக்டவுன்ல ஒரு ஸ்கிரிப்ட் முடிச்சேன். அப்படி இருந்தும் ஷூட்டிங் போற வரைக்கும் அத இம்ப்ரொவைஸ் பண்ணிட்டே இருக்கனும். இப்போ ஒரு 1 லைன் கிடைச்சிருக்கு...என்னோட விருப்பம் என்னனா ஒரு நல்ல படம் பண்ணனும். ஓடிடி-ஓ, தியேட்டரோ ஆடியன்ஸ திருப்தி பண்ற படமா இருக்கனும்.
ரொம்ப நேரம் சினிமா பத்தி பேசிட்டோம்...இப்போ ரெஃப்ரஷிங்கா ஒரு கேள்வி...போன வருஷம் உங்க ஃபிரண்ட்ஸ் கூட வீடியோ கால் பண்ணிருந்தீங்க...அன்னைக்கு ஃபுல்லா ட்ரெண்ட், டாக் ஆஃப் தி டவுன் அது தான் ! இந்த வருஷம் ஏதாச்சு வீடியோ கால் ? எப்படி பேசிக்கிறீங்க எல்லாரும் ?
Daily-லாம் பேசுறதில்லங்க, ஒவ்வொருத்தருக்கு எப்போ தோணுதோ....எங்க வாட்ஸப் குரூப்ல கூட டெய்லி ஃபார்வார்ட் மெசேஜ், மீம்ஸ்லாம் ஷேர் பண்ணுவோம். அவங்கவங்களுக்கு ஃபேமிலி, வீடு, வேலைகள்னுலாம் இருக்கு. லாக்டவுன்ல ஷூட்டிங் இல்லனாலும், மத்த வேலைகள்ள பிஸியா இருக்கோம். உண்மைய சொல்லணும்னா போன வருஷம் கூட பிளான் பண்ணி பண்ணதில்ல. சஞ்சீவ் திடீருனு லைன்ல வந்தாரு, அப்பறோம் விஜய் வந்தாரு, அப்படியே ஒவ்வொருத்தரா லைன்ல வந்தாங்க. It was not planned...it happend !!! அன்னைக்கு Friendship day வேற,, சூப்பரா போச்சு.. இந்த வருஷமும் நடக்கும்...நடக்கும் போது சூப்பரா இருக்கும்.
இந்த வீடியோ கால் பல Friends Gang-க்கு எடுத்துக்காட்டா இருந்துச்சு...10 வருஷமா Goa பிளான் போடுறவங்க மத்தில உங்க கேங் பிரமாதம் சார் !!!
எங்களுக்கும் அப்படி நிறைவேறாத பிளான்லாம் இருக்கு. நாங்க எல்லாரும் Batchelors-ஆ இருக்கப்போ ஒரு டூர் போலாம்னு நினைச்சோம்...ஆனா அது நாங்க Batchelors-ஆ இருந்தப்போ நடக்கல (சிரித்தபடி....) முழுக்க முழுக்க Batchelor ட்ரிப் பிளான் பண்றப்போ, ராம்குமார்க்கு கல்யாணம் ஆகிடுச்சு, அப்பறோம் விஜய்க்கு கல்யாணம் ஆகிடுச்சு. விஜய் ஷூட்டிங் அப்போ போயிருக்கோம்..ஊட்டி, ஹைதராபாத், கேரளா அங்கெல்லாம் போன அனுபவம் இருக்கு.
இந்த போட்டோ எங்க கண்ண உருத்திட்டே இருக்கும் சார்...மெயினா இந்த காஸ்டியூம் !!! இது எங்க எடுத்தது ?
இந்த போட்டோ துபாயில எடுத்தது..மெக்ஸிகன் ஸ்டைல் அது, Cowboy மாதிரி. ஒரு ரெஸ்டாரன்ட் போனோம், அங்க எடுத்தது இது. கையோட போட்டோ எடுத்து தருவாங்க.. சூப்பர் எக்ஸ்பீரியன்ஸ் அது.
இப்படி நம்ம கேக்குற எல்லா விஷயத்தையும் கேள்வியா நினைக்காம, கேஷுவலா கொண்டு போனதுதான் இயக்குனர் மற்றும் நடிகர் ஸ்ரீநாத்தின் சிறப்பாம்சம். நிச்சயம் இந்த எழுத்து வடிவ தொலைபேசி நேர்காணல் சினிமாவை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் பாசிட்டிவ் எனர்ஜியை ஏற்றும் என்று நம்புகிறோம். கலாட்டா கலந்துரையாடலுக்காக நிருபர் சக்தி பிரியன்.